தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வந்தவர் மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வித்யாசகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற குழந்தையும் உள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நடிகை மீனா உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “ஒரு உயிரை காப்பாற்றுவதை விட சிறந்த விஷயம் வேறு எதுவும் கிடையாது. அப்படி உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு சிறந்த விஷயம் தான் உடல் உறுப்பு தானம்.
அனைவரும் உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது தானம் செய்பவர்களுக்கும், அதன்மூலம் பயனடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் அல்ல. இது சம்பந்தபட்டவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளேன். நம்முடைய புகழ் நிலைத்து நிற்க இதுவே சிறந்த வழி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் மீனா. அவரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் செயலிழந்ததை அடுத்து, அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்க மீனா பெரிதும் முயன்றார். ஆனால் அது கிடைக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அதிதி ‘ஐ லவ் யூ’... இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்