
பிரபல நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டை சேர்ந்தவர். இவர் நேபாள பிரதமராக பதவி வகித்த பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார். இவரது தந்தை, பிரகாஷ் கொய்ராலா, நேபாளத்தின் முன்னாள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர். நேபாளத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த மனிஷா சினிமாவில் நடிக்க இந்தியா வந்தார்.
நடிப்பின் மீது தீராத ஆசை கொண்ட மனிஷா கொய்ராலா 1989-ம் ஆண்டு வெளியான பெரி பெடவுலா நேபாளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதிக்க இந்தியா வந்தார். 90களில் தொடக்கத்தில் மும்பையில் மாடலிங் செய்து வந்த அவருக்கு பாலிவுட்டில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. 1991-ம் சௌதாகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. மனிஷாவின் போட்டோவை ஒருமுறை பார்த்த மணிரத்னம், தனது பம்பாய் படத்தில் அவரை நடிக்க அழைத்தார். ஆனால் தனது சினிமா கெரியரை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கேட்ட உடன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஆனால் அவரின் சினிமா நண்பர்கள், தோழிகள் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை யாராவது வேண்டாம் என்று கூறுவார்களா என்று மனிஷாவை திட்டி உள்ளார்கள். அதன்பின்னரே அவர் பம்பாய் படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம்.
1995-ம் ஆண்டு வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார் மனிஷா கொய்ராலா. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மனிஷாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதை தொடர்ந்து ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் நடித்தார் மனிஷா. இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் மனிஷா .
பின்னர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் மனிஷா நடித்திருந்தார். இதை தொடர்ந்து கமல்ஹாசனுடன் ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். அவர் தமிழில் கடைசியாக மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடித்திருந்தார். இதனிடையே புகழின் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலா திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போனார். அதற்கு அவரின் மதுப்பழக்கம் தான் காரணம் என்று கூறப்பட்டது.
முதல்வன் படத்தில் நடித்த போது மனிஷா மது அருந்தி விட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார் எனவும் அப்போது தகவல் வெளியானது. இதனால் இயக்குனர் ஷங்கர் அவரை பிரபல நடிகரின் மனைவி ஒருவரிடம் மனிஷாவை கவுன்சிலிங்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு மனிஷா மதுப் பழக்கத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஹிந்தியில் மனிஷா நடித்த பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் 2000களின் தொடக்கத்தில் அவரின் திரைப்பயணம் சறுக்கலை சந்தித்தது. அவர் ஹிந்தியில் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பை பெறவில்லை.
2012-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டார். புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பிறகு, நோய் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்தி வருகிறார்.
பின்னர் 2015-ம் ஆண்டு செஹேர்: எ மாடர்ன் டே கிளாசிக் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் மனிஷா கொய்ராலா. தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்த அவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹீராமண்டி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதில் மனிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இதனிடையே 2020-ம் ஆண்டு காத்மாண்டுவின் குளோபல் காலேஜ் இன்டர்நேஷனல் ஆதரவுடன் மனிஷா கொய்ராலா புற்றுநோய் கல்வி நிதி என்ற திட்டத்தை தொடங்கினார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.