
32 வயதை எட்டியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகா மற்றும் மலையாள பட தயாரிப்பாளரான சுரேஷ்குமாரின் இளைய மகள் ஆவார். தன்னுடைய தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே மலையாள திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ். பின்னர் 2013 ஆம் ஆண்டு, மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'ரிங் மாஸ்டர்', திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' என்கிற தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' மற்றும் அதே ஆண்டு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'ரெமோ' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அதேநேரம் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'தொடரி', விஜய்க்கு ஜோடியாக நடித்த 'பைரவா' போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. மேலும் பாபி சிம்ஹாவுடன் இவர் நடித்த 'பாம்பு சட்டை' திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு விமர்சன ரீதியான வெற்றியை தேடி தந்தது. அதன் பின்னர் வலுவான கதாபாத்திரத்திற்கு கொக்கி போட்ட கீர்த்தி சுரேஷ், இயக்குனர் 'கல்கி 2898 AD ' பட இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்த 'மகாநடி' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இந்தத் திரைப்படம் பிரபல பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 'மகாநடி' திரைப்படத்திற்குப் பின்னர், தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்திக்கு மகாநடிக்கு பின்னர் இவர் கதையின் நாயகியாக நடித்த திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை.
மேலும் முன்னணி ஹீரோக்களான நானிக்கு ஜோடியாக நடித்த 'தசரா', உதயநிதிக்கு ஜோடியாக நடித்த 'மாமன்னன்' போன்ற படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுக்கும் விதத்தில் நடித்துள்ள, 'ரகு தாத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 'தங்கலான்' மற்றும் 'டிமான்ட்டி காலனி' போன்ற திரைப்படங்களுக்கு போட்டியாக வருகிறது. எனவே 'ரகுதாத்தா' திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து தமிழில் ரிவோல்ட் ரீட்டா, கன்னிவெடி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'பேபி ஜான்' திரைப்படத்திலும், வருண் தவான் ஜோடியாக, தமிழில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் அல்லது மற்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க இரண்டு கோடி முதல் மூன்று கோடி வரை மட்டுமே சம்பளமாக பெறும் கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் நடிக்க 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அஜித்துக்கு பின்னர்... விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ரஜினி - கமல் பட நடிகை! யார் தெரியுமா?