
1997-ல் வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படம் சூர்யாவை தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. சிவக்குமாரின் மகனாக இருந்ததால் சுலபமாக திரைத்துறையில் நுழைந்த சூர்யாவுக்கு வெற்றிகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. முதலில் சரியாக நடிப்பு வரவில்லை என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், தன் வித்தியாசமான நடிப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தற்போது உயர்ந்துள்ளார் சூர்யா.
தனது நடிப்பால், குணத்தால், உழைப்பால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார் சூர்யா. நந்தாவில் நடிப்பதற்கு முன்பு நேருக்கு நேர், காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ், ஆகிய படங்களில் நடித்தார். ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்து வெற்றியை ருசித்தார் சூர்யா. ஆனால் மற்ற படங்கள் எல்லாம் வசூலில் ஏமாற்றின.
நடிப்புக்காகவும், எந்த படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. இந்த நிலையில் ஒரு பெரிய திருப்புமுனைக்காக காத்திருந்தார் நடிகர் சூர்யா. அப்போது தான் பாலா இயக்கிய நந்தா, சூர்யா மீதான எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. நடிப்புக்கான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் அசத்துவார் என்கிற நம்பிக்கையை சூர்யா மீது விதைத்தது. சூர்யாவை ஒரு நடிகனாக முன்னிருத்திய முதல் படம் என்றால் அது நந்தா திரைப்படம் தான்.
இதையடுத்து வெளியான காக்க காக்க சூர்யாவை வசூல் மன்னனாக காண்பித்த முதல் படமாகும். படம் ரிலீஸ் ஆகும் முன் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஆக்ஷன் கதாநாயகனாக, காவல்துறை அதிகாரியாக நடித்த சூர்யா, ரசிகர்களை ஏமாற்றவில்லை. அழகான பாடல்கள், அம்சமான பாடல் காட்சிகள், ஆக்ஷன் பரபரப்புகள் என ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைத்தது காக்க காக்க.
இரண்டே வருடங்களில் நந்தாவும், காக்க காக்கவும் சூர்யாவின் பாதையை மாற்றின. அவரின் அந்தஸ்தையும் உயர்த்தின. பிரபல நட்சத்திரமாக உருவெடுத்தார் சூர்யா. பின்னர் பிதாமகனில் நல்ல நடிகனாக இன்னொரு முறை நிரூபித்தார் சூர்யா. ஆயுத எழுத்து படத்தில் மணிரத்னம் பட கதாநாயகன் ஆனார். எனினும் சூர்யாவுக்கு இன்னொரு மிகப்பெரிய வெற்றியை அளித்த படம் கஜினி தான். பழிவாங்கும் கதை தான் என்றாலும், வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டதால், ரசிகர்களின் ஆதரவை பெற்றது கஜினி.
அசின் - சூர்யா இடையேயான காதல் காட்சிகளை யாரால் மறக்க முடியும். செய்தித் தாள்களில் வரும் பரபரப்பான செய்திகளை கொண்டு கதைகோர்க்க இயக்குனர் கேவி ஆனந்துக்கு அழகாக வரும். இந்தியாவில் இருந்து போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவது போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்ப்போம். அதைத்தான் அயன் கதையாக மாற்றினார் கேவி ஆனந்த். ஒரு கமர்ஷியல் படம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என அமைந்தது அயன் திரைப்படம். சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது அயன் திரைப்படம்.
அதேபோல் ஹரியுடன் இணைந்து வேல் படத்தில் நடித்த சூர்யா, அதன்பின் சிங்கம் படத்திற்காக மீண்டும் இணைந்தார். சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை, ஆக்ஷன் ஆகியவை படத்திற்கான சரியான கலவையாக அமைந்தது. துரை சிங்கமாக அசத்தி இருந்தார் சூர்யா. ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் என்கிற டயலாக்கில் தொடங்கி படம் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. வாரணம் ஆயிரம் கெளதம் வாசுதேவ் மேனன் - சூர்யா கூட்டணியில் அமைந்த இன்னொரு அழகான படம். கல்லூரி மாணவர், காதலன், வயதானவர் என பலவேடங்களில் அசத்தினார் சூர்யா. சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டை வைத்து தனது பலத்தை நிரூபித்தார். அழகான காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என ரசிகர்களுக்கு ஒரு இதமான உணர்வை அளித்தது வாரணம் ஆயிரம்.
சுதா கொங்கராவின் இயக்கிய சூரரைப் போற்று சூர்யாவின் கெரியரில் மற்றுமொரு திருப்புமுனை படமாக அமைந்தது. சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று அசத்தினார் சூர்யா. இதையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலனாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்த சூர்யா, இந்த படத்தை தயாரித்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டார்.
இதையடுத்து சூர்யாவை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த படம் விக்ரம். இதில் அவர் நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் சில நிமிடங்களே படத்தில் வந்தாலும் அது ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. சூர்யாவை தவிர அந்த கதாபாத்திரத்தை வேறுயாரும் அத்தனை கச்சிதமாக நடித்திருக்க முடியாது. இதன்பின்னர் கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் சூர்யா நடிப்பில் வெளிவந்தன. அடுத்ததாக கருப்பு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் சூர்யா.
குடும்ப வாழ்க்கையில் நல்ல மகனாக, சகோதரனாக, கணவராக வாழ்ந்து காட்டிவரும் சூர்யா, தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.350 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட பங்களா உள்ளது, அதேபோல் மும்பையில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சூர்யா. விரைவில் சென்னை ஈசிஆரில் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்ட உள்ளாராம் சூர்யா.