பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரை அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். பைரப்பா - ருத்ரம்மா தம்பதியின் மகளான நடிகை சரோஜா தேவி, கடந்த 1938-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இவருடைய தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி, தனது 13 வயதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியபோது, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இவருக்கு பட வாய்ப்பு கொடுத்துள்ளார். கன்னடத்தில் வெளிவந்த மகாகவி காளிதாஸா என்கிற படம் தான், நடிகை சரோஜா தேவியின் முதல் படமாகும். இப்படம் 1955-ல் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் துணை நடிகையாக தான் நடித்திருந்தார் சரோஜா தேவி.
தமிழில் இவர் முதன்முதலில் எண்ட்ரி கொடுத்த படம் தங்கமலை ரகசியம். இதில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தார். இவரது நடிப்பை பார்த்து வியந்துபோன எம்.ஜி.ஆர். தனது நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்த ஒரு படத்திலேயே சரோஜா தேவி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். பின்னர் இந்தி திரையுலகம் பக்கம் சென்று அங்கும் சில ஹிட் படங்களில் நடித்த இவர், சிவாஜியின் கல்யாண பரிசு படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
இதையும் படியுங்கள்... 30 வருட நட்பு முறிந்ததா? பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? - மவுனம் கலைத்த மணிரத்னம்
பின்னர் தனது முதல் தமிழ் பட ஹீரோவான எம்.ஜி.ஆர். உடன் திருடாதே படத்தில் நடித்த சரோஜா தேவி, அடுத்தடுத்து ஆடிப்பெருக்கு, ஆலயமணி, பெரிய இடத்து பெண், எங்க வீட்டு பிள்ளை மற்றும் அன்பே வா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் நடிகர் எம்.ஜி.ஆர் உடன் மட்டும் 26 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். இவர்களது ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார் சரோஜா தேவி. இவர் அந்த காலத்திலேயே 4 மொழிகளை கற்றுக்கொண்டு, பான் இந்தியா நடிகையாக வலம் வந்துள்ளார். இவர் முன்னணி ஹீரோயினாக இருந்த சமயத்தில் இவரது சேலை, ஹேர்ஸ்டைல் ஆகியவை ரொம்ப பேமஸ் ஆக இருந்ததாம். அந்த காலத்து பெண்கள் அதே மாதிரி ஆடைகளை விரும்பி வாங்கி அணிய ஆசைப்பட்டார்களாம்.
இதையும் படியுங்கள்... சியானின் அடிபொலி சம்பவம்... செண்டமேளம் அடித்து கேரளாவில் கெத்து காட்டிய விக்ரமின் மாஸ் வீடியோ இதோ
நடிகை சரோஜா தேவி 1967-ம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் நடிகை சரோஜா தேவி எம்.ஜி.ஆர் உடன் படங்களில் நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக நடித்த படம் அரச கட்டளை. பின்னர் சிவாஜி உடன் ஜோடி சேர்ந்து நடித்த சரோஜா தேவி, என் தம்பி, தேனும் பாலும், அருனோதயம் போன்ற படங்களிலும், ஜெமினி கணேசனுடன் பெண் என்றால் பெண், பணமா பாசமா, மாலதி மற்றும் கண்மலர் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்து சக்சஸ் ஆனது.
நடிகை சரோஜா தேவி, கடைசியாக தமிழில் ஹீரோயினாக நடித்த படம் பத்து மாத பந்தம். 1986-ம் ஆண்டு இவரது கணவர் காலமானார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என்ற மகள்களும், கவுதம் என்ற மகனும் உள்ளனர். நடிகை சரோஜா தேவி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ விருது என ஏராளமான விருதுகளை வாங்கி உள்ளார். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் செட்டிலாகி, சமூக நலப்பணிகளை செய்து வருகிறார் சரோஜா தேவி.
இதையும் படியுங்கள்... 'ஆஸ்கர் விருதுக்கு' பரிசீலிக்கப்பட்டு 13 இந்திய படங்கள் எவை? தமிழில் எந்த படம் பார்க்கப்பட்டது தெரியுமா...?