
ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் எப்போதும் வக்ர நிலையில் (பின்னோக்கிய நிலையில்) பயணிக்கிறார். இவர் குழப்பங்கள், தாமதம், எதிர்பாராத மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிக்க கூடிய இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டில் ராகு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியடைய இருக்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் அவர், ஆகஸ்ட் மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 5 2026 மகர ராசிக்கும் பெயர்ச்சியாக இருக்கிறார். ராகுவின் இந்த இரு பெயர்ச்சி காரணமாக 2026 இல் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ராகுவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. எனவே 2026 ஆம் ஆண்டு முழுவதும் ரிஷப ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ராகுவின் செல்வாக்கு எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வேலையிடத்தில் சில சிக்கல்களை சந்திக்கக் கூடும். தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் குறையலாம். மன உளைச்சல் அதிகமாக இருக்கலாம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அதற்கேற்ப செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். முக்கிய பணிகளும் தடைபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியால் பல சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். இதனால் மன உளைச்சல் ஏற்படும். முக்கிய பணிகளை முடிக்க முடியாமல் போகலாம் அல்லது தாமதம் ஏற்படலாம். வருகிற வருமானம் அனைத்தும் செலவாகிவிடக்கூடும். வருமானத்தையும் செலவையும் சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கலாம். குடும்பம் அல்லது பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மோதல்கள் எழலாம். எனவே இந்த ஆண்டு முழுவதும் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி ஆரோக்கியம் தொடர்பான சவால்களை தரக்கூடும். 2026 இல் கன்னி ராசிக்காரர்கள் உடல் நலனில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கலாம். நிதி சார்ந்த சவால்களை கன்னி ராசிக்காரர்கள் எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற அல்லது ஆபத்தான விஷயங்களில் முதலீடு செய்யாதீர்கள். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னரும் ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக சிந்திக்க வேண்டும். தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த ஆண்டு போட்டியாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ராகு பெயர்ச்சி காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் 2026ல் மிக கவனமாக இருக்க வேண்டும். அன்புக்குரியவர்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். இது உறவுகளில் நெருக்கடிக்கு வழிவகுக்கும். தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறையும். வேலைக்காக நீங்கள் நிறைய ஓட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போவதால், ஏமாற்றம் அடையக்கூடும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். செலவுகளும் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
கும்ப ராசிக்காரர்கள் ராகுவின் செல்வாக்கால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உடல் ரீதியாக அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தேவையில்லாத விஷயங்கள் உங்களை வாட்டி வதைக்கலாம். அதிகரித்த மன அழுத்தம் உங்கள் உடல்நலத்தையும் வெகுவாக பாதிக்கும். வேலைகளிலும் தடைகளை சந்திக்க நேரிடும். எனவே 2026 ஆம் ஆண்டில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சி காரணமாக கடும் நிதி சவால்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் வேலையில் இருந்து வருமானம் குறைவாக இருக்கும். சிலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும். எனவே வருமானம் மற்றும் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே இந்த சூழ்நிலைகளை பொறுமையுடனும், கவனமாகவும் கையாள வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)