
குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைப் பண்புடன் விளங்குவார்கள். எந்த இடமாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி தலைமைப் பண்பை வெளிப்படுத்துவார்கள். குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களிடம் இருக்கும் சிறப்பு குணங்கள் மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. மேலும் இவர்களிடம் இருக்கும் சில பண்புகள், அவர்களை அவரவர் துறைகளில் தலைவர்களாக மாற்றுகிறது. எந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு தலைவருக்குரிய சிறப்பு குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் உறுதியான மனமும், இலட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் இலக்குகளை அடைவதற்காக கடின உழைப்பையும், விடாமுயற்சியும் மேற்கொள்வார்கள். பிறக்கும்போதே ஒருவித கவர்ச்சியும், அதிகாரத்தையும் கொண்டிருப்பதால் இவர்களை பெரும் கூட்டத்திலும் எளிதில் அடையாளம் காண முடியும். சவால்களை எதிர்கொள்வதில் அஞ்சாதவர்களாகவும், தலைமை பொறுப்பை ஏற்பதில் தயங்காதவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களின் அசட்டு தைரியமும், தன்னம்பிக்கையும் அவர்களை எப்பேர்பட்ட கடினமான செயலையும் செய்ய தூண்டுகிறது. புதுமையாக சிந்திப்பவர்களாகவும் அதே சமயம் மற்றவர்களின் யோசனைகளை கேட்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்த குணங்கள் அவர்களை தலைவர்களாக மாற்றுகிறது.
மே மாதத்தில் பிறந்தவர்கள் ஆற்றலுக்கும், வசீகரத்திற்கும் பெயர் போனவர்கள். இவர்கள் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஒரு குழுவை வழிநடத்தும் திறமை அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது. அவர்களின் ஆர்வமும் உற்சாகமும் பிறரையும் உற்சாகப்படுத்தக்கூடியவை. மக்களை வசீகரிக்கும் குணம் கொண்டிருப்பதால் இவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகின்றனர். பிறரின் கவனத்தை ஈர்த்து அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்குகின்றனர். அவர்களின் தாராள மனப்பான்மை, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம், பிறரிடம் இயல்பாக பழகக் கூடிய பண்பு, எளிதில் அணுகக்கூடிய தன்மை ஆகியவை காரணமாக இவர்கள் மக்களுக்கு பிடித்த தலைவர்களாக இருக்கின்றனர்.
ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, கவர்ச்சியான பேச்சு இயல்பிலேயே இருக்கும். இவர்கள் தங்கள் பேச்சாற்றல் மற்றும் நகைச்சுவை திறனால் மற்றவர்களை எளிதில் வசீகரித்து தங்கள் பின்னால் அணிவகுக்கச் செய்வார். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறனும், புதிய யோசனைகளை உருவாக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. இயல்பாகவே இவர்களிடம் ஒரு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அதேபோல் ஜூலையில் பிறந்தவர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்களாகவும், அதே சமயம் மற்றவர்களுடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் கருணை மற்றும் பாசத்தால் பிறரை வெல்வார்கள். நம்பகத்தன்மை, பாதுகாப்பு உணர்வு பிறருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம், மென்மையான அணுகுமுறை ஆகியவை இவர்களை நம்பி பின்தொடர வைக்கும்.
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் தத்துவார்த்த ரீதியாக சிந்தனை கொண்டவர்கள். எதிர்காலத்தைப் பற்றிய புரிதலும், பார்வையும் அவர்களுக்கு இருக்கும். எப்பொழுதும் தங்கள் அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்களின் உற்சாகம் மற்றும் வெளிப்படையான அணுகுமுறை காரணமாக பிறரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் தொடர்ந்து முன்னேறி செல்ல விரும்புவது அவர்களை தலைவர்களாக மாற்றுகிறது. அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் நீதி, நேர்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே அமைதியான பண்பு கொண்டவர்கள். சிக்கலான சூழ்நிலைகளில் நடுநிலையாகவும் அதே சமயம் சிறந்த முடிவுகளை எடுப்பதாலும் இவர்கள் சிறந்த தலைவர்களாக செயல்படுவார்கள். தர்கரீதியாக சிந்திப்பது, ராஜதந்திரமாக அணுகுவது, சமரசத்தை நாடும் குணம் இருப்பதால் இவர்கள் தலைமைப் பண்பில் சிறந்து விளங்குவார்கள்.
(இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தலைவராக மாறுவார்கள் என்பது அர்த்தம் கிடையாது. இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே தலைமைத்துவ குணங்கள் இருப்பதாக ஜோதிடங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் ஒருவரின் தனிப்பட்ட திறமைகள், முயற்சி மற்றும் சூழல் ஆகியவையே ஒருவரை உண்மையான தலைவராக்குகின்றன. இந்த ஜோதிட கணிப்புகளை வழிகாட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் ஒவ்வொருவருமே தலைவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)