அல்லாவை வணங்குங்கள்; கால்பந்தை அல்ல! FIFA World Cup-ல் மூழ்கிக்கிடக்கும் கேரளாவிற்கு இஸ்லாமிய அமைப்பு அறிவுரை

By karthikeyan VFirst Published Nov 25, 2022, 4:53 PM IST
Highlights

ஃபிஃபா உலக கோப்பையை கேரள ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், அல்லாவை வணங்குங்கள்; கால்பந்தை வேண்டாம் என்றும், கால்பந்து விளையாட்டிற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றும் இஸ்லாமிய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தங்களுக்கு பிடித்தமான அணிகளையும், பிடித்த வீரர்களையும் கொண்டாடிவருகின்றனர் கேரள ரசிகர்கள். 

இந்தியாவை பொறுத்தமட்டில் கால்பந்து விளையாட்டு அதிகமாக கொண்டாடப்படும் மாநிலங்கள் கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகும். குறிப்பாக கேரளா ரசிகர்கள் தான் கால்பந்தை வெறித்தனமாக கொண்டாடுபவர்கள். ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையையொட்டி, கேரளாவில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகியோருக்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டதுடன், பல வீடுகளுக்கு அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகளின் ஜெர்சி நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறது.

FIFA World Cup 2022: 5 கால்பந்து உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர்! கிறிஸ்டியானா ரொனால்டோ வரலாற்று சாதனை

இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, கேரள கால்பந்து ரசிகர்கள் 17 பேர் சேர்ந்து, எந்தவித இடையூறுமில்லாமல் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் அனைத்தையும் பெரிய திரையில் பார்த்து ரசிப்பதற்காகவே ரூ.23 லட்சத்துக்கு ஒரு தனி வீட்டை விலைக்கு வாங்கினர். இப்படியாக கேரளாவில் கால்பந்தாட்டம்  மற்றும் ஃபிஃபா உலக கோப்பை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் செயல்பட்டுவரும் சமஸ்தா கேரளா ஜம்-இய்யாதுல் குட்பா கமிட்டி என்ற இஸ்லாமிய அமைப்பு கால்பந்து விளையாட்டுக்கு அடிமையாகிவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. 

இந்த கமிட்டி மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பிரசங்கங்களை வழங்கும் சன்னி மதகுருக்களின் அமைப்பாகும். கால்பந்து வீரர்களை ஹீரோக்களாக பாவித்து தொழுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் ஏகத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்துவருகிறது.

இதுகுறித்து பேசிய இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நாசர் ஃபைஸி, வீரர்கள் தொழும் கட்டத்தை மக்கள் எட்டியிருக்கிறார்கள். மக்கள் நம்மை நேசிப்பதை விட மற்ற தேசங்களின் கொடிகளை வணங்குகிறார்கள். மக்கள் வாழ்வாதாரத்துக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கால்பந்தாட்ட வீரர்களின் கட்-அவுட்டுகளுக்கு இளைஞர்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பு தடைபடுகிறது, மக்கள் தொழுகைக்காக மசூதிக்குக்கூட வராமல் தொலைக்காட்சிகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றார்.

இந்தியா மீது படையெடுத்த முதல் நாடு போர்ச்சுகல். ஆனால் இன்றைக்கு கால்பந்து என்ற பெயரில் பலர் போர்ச்சுகலை கொண்டாடுகின்றனர். குரான் விளையாட்டை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் பயன்படும் அளவிற்கு மட்டுமே. இஸ்லாத்திற்கு எதிரான நாடுகளை கொண்டாடுவது, தொழுகையை உதறிவிட்டு இரவுகளில் கால்பந்து போட்டிகளை பார்ப்பது சரியல்ல. விளையாட்டை ரசிக்கலாம். அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கருத்து கூறிய கேரள கல்வித்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான வி.சிவன்குட்டி, கால்பந்தை கொண்டாடுவதும், தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டாடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

FIFA World Cup: 2 கோல் அடித்த ரிச்சர்லிசன்.. செர்பியாவை வீழ்த்தி வெற்றியுடன் உலக கோப்பையை தொடங்கிய பிரேசில்

கால்பந்து ஜுரம் கேரளா முழுக்க பரவிக்கிடக்க, ஃபிஃபா உலக கோப்பையை கேரள ரசிகர்கள் கொண்டாடுவது, உலகளவில் கேரளா மீது கவனத்தை திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!