ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் பிரேசில் அணி அதன் முதல் போட்டியில் செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த உலக கோப்பையை தொடங்கியது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் சில சிறிய அணிகள் எழுச்சி பெற்று பெரிய அணிகளையே வீழ்த்தி வெற்றி பெற்றுவருகின்றன.
அர்ஜெண்டினாவை சவுதி அரேபியா அணி வீழ்த்தியது. 2014 சாம்பியனும், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவும் திகழும் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தியது.
undefined
மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகிய சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களுக்காக, அவர்களது அணிகளான முறையே அர்ஜெண்டினா, போர்ச்சுகல் மற்றும் பிரேசில் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அர்ஜெண்டினா அணி முதல் போட்டியில் சவுதியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்று பிரேசில் அணி அதன் முதல் போட்டியில் செர்பியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போட தீவிரமாக முயற்சித்தனர். குறிப்பாக பிரேசில் அணி வெறித்தனமாக விளையாடியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பிரேசிலுக்கு முதல் கோலை அடித்து கொடுத்த ரிச்சர்லிசன், 73வது நிமிடத்தில் மீண்டுமொரு கோல் அடித்தார். கடுமையாக போராடியும் செர்பியாவால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் அணி, இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.