FIFA World Cup 2022: களைகட்டும் கால்பந்து உலக கோப்பை..! பெரிய அணிகள் அதிர்ச்சி தோல்வி.. அசத்தும் சிறிய அணிகள்

By karthikeyan V  |  First Published Nov 24, 2022, 6:01 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய பெரிய அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன.
 


22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுதான் கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் அவர்களது அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்கும், ரொனால்டோ போர்ச்சுகலுக்கும் உலக கோப்பையை வெல்ல போராடுவார்கள் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் அவர்கள் ஆடும் போட்டிகளை ஆவலுடன் பார்த்துவருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. 2வதுநாள் 2 போட்டிகள் நடந்தன. 2ம் நாளின் முதல் போட்டியில் ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணியும், அடுத்த போட்டியில் செனகலை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் வெற்றி பெற்றன.

ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 2 ஆட்டங்களில் ஆட தடை, ரூ.50 லட்சம் அபராதம்

3ம் நாளன்று (நவம்பர் 22) 4 போட்டிகள் நடந்தன. அமெரிக்கா - வேல்ஸ் இடையேயான போட்டி டிராவானது. லியோனல் மெஸ்ஸி ஆடுவதால் அவர் தலைமையிலான அர்ஜெண்டினா அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. க்ரூப் சி-யில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி முதல் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. சிறிய அணியை எதிர்கொள்வதால் அர்ஜெண்டினா தான் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் அர்ஜெண்டினாவிற்கு மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார். அதுவும் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார். சவுதி அணி 2 கோல்களை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சவுதியின் இந்த வெற்றியை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் சில பெரிய அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன. அதேவேளையில், சவுதி மாதிரியான சிறிய அணிகள் அபாரமாக ஆடுகின்றன. ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி சிறிய அணியான சவுதியிடம் தோல்வியடைந்தது.

3ம் நாளில் அதன்பின்னர் நடந்த டென்மார்க் - துனிசியா இடையேயான ஆட்டமும், மெக்ஸிகோ - போலந்து இடையேயான ஆட்டமும் கோலே அடிக்காமல் டிராவில் முடிந்தது. 

4ம் நாள் ஆட்டத்தில்லும் ஓர் அதிர்ச்சி தோல்வி நிகழ்ந்தது. 2014ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை வென்ற முன்னாள் சாம்பியனான ஜெர்மனி அணியும், இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள வலுவான அணிகளில் ஒன்று. ஆனால் ஜப்பானிடம் 2-1 என்ற கோல் கணக்கில் முதல் போட்டியிலேயே ஜெர்மனி அணி தோல்வியடைந்தது.

உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் சிறிய அணி, பெரிய அணி என்றெல்லாம் இல்லை. அது கால்பந்தோ அல்லது கிரிக்கெட்டோ, எந்த உலக கோப்பையாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அந்த அணிதான் ஜெயிக்கும். அண்மையில் நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் பாகிஸ்தானும், நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்காவும் தோற்றதை யாரும் மறந்துவிடமுடியாது. அதேபோலத்தான் ஃபிஃபா உலக கோப்பையிலும் சில சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி சர்ப்ரைஸ் கொடுக்கின்றன. எனவே இந்த ஃபிஃபா உலக கோப்பையில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன.

FIFA World Cup 2022: பரபரப்பான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி

அர்ஜெண்டினா மாதிரியான பெரிய அணியின் தோல்வியும், சவுதி அரேபியா மாதிரியான சிறிய அணியின் வெற்றியும் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. மெஸ்ஸி, ரொனால்டோ மாதிரியான பெரிய வீரர்கள் அணியில் இருந்தாலும்,  ஒரு அணியாக அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே போட்டியை ஜெயிக்க முடியும். ஒரு தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருப்பதால் மட்டுமே ஜெயித்துவிடமுடியாது. அனைத்துவீரர்களும் வெற்றி வேட்கையுடன் சிறப்பான ஆடினால் தான் வெற்றி வசப்படும். அப்படி ஒரு அணியாக ஒன்றிணைந்து சிறப்பாக ஆடினால் எப்பேர்ப்பட்ட அணியையும் வீழ்த்திவிடமுடியும்.
 

click me!