FIFA World Cup:கொல்கத்தாவில் களைகட்டும் ஜெர்சி,கொடி விற்பனை! விருப்பவீரர்களின் ஜெர்சியை வாங்க ரசிகர்கள் ஆர்வம்

By karthikeyan V  |  First Published Nov 20, 2022, 6:44 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இந்தியாவில் கால்பந்துக்கு பெயர்போன மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்,  தங்களது விருப்ப வீரர்களின் ஜெர்சி மற்றும் விருப்ப அணிகளின் கொடிகளை வாங்க ரசிகர்கள் அலைமோதுகின்றனர். அதனால் மெய்டன் மார்க்கெட்டில் கூட்டம் அள்ளுகிறது.
 


ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இன்று கத்தாரில் தொடங்குகிறது. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இன்று முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான கால்பந்து உலக கோப்பையையொட்டி கத்தார் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மத்திய ஆசிய நாட்டில் முதல் முறையாக ஃபிஃபா உலக கோப்பை நடத்தப்படுகிறது.

ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  ஆடுகின்றன. கத்தாரில் 8 மைதானங்களில் கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளன. கால்பந்து விளையாட்டின் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த உலக கோப்பை மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest Videos

undefined

ஃபிஃபா உலக கோப்பை: ஒரே ஃப்ரேமில் மெஸ்ஸி - ரொனால்டோ.. நூற்றாண்டின் சிறந்த ஃபோட்டோ என கொண்டாடும் ரசிகர்கள்

இந்தியாவை பொறுத்தமட்டில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான 2 மாநிலங்கள் கேரளா மற்றும் மேற்கு வங்கம். இந்த 2 மாநிலங்களில் தான் கால்பந்தாட்டம் கொண்டாடப்படுகிறது. அதிகமான வீரர்களும், ரசிகர்களும் இந்த மாநிலங்களில் தான் உள்ளனர். 

ஃபிஃபா உலக கோப்பையயையொட்டி, கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய வீரர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் ஆஸ்தான வீரர்களின் கட் அவுட்டுகளை வைத்து அசத்தியுள்ளனர். மேலும் பல வீடுகளில் மஞ்சள் (பிரேசில்), வெள்ளை&நீலம்(அர்ஜெண்டினா) ஆகிய நிறங்களில் பெயிண்ட் அடித்து தங்கள் விருப்ப அணிகளுக்கு ஆதரவை காட்டியுள்ளனர்.

அந்தவகையில், ஃபிஃபா உலக கோப்பையையொட்டி இது  கொல்கத்தாவா அல்லது கத்தாரா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஜெர்சி விற்பனை கொல்கத்தாவில் களைகட்டுகிறது. கேரளாவை போலவே மேற்கு வங்கத்திலும் கால்பந்தாட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், கொல்கத்தாவின் மெய்டன் மார்க்கெட்டில் கால்பந்து ரசிகர்கள், தங்களது விருப்ப வீரர்களின் ஜெர்சி மற்றும் விருப்ப அணிகளின் கொடிகளை வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.

FIFA World Cup: கேரளாவில் களைகட்டிய கொண்டாட்டம்.. பிரம்மாண்ட கட் அவுட்டுகள்! மெஸ்ஸியின் கட் அவுட் உடைந்த சோகம்

கடந்த ஒரு வாரமாகவே அங்கு ஜெர்சி, கொடி விற்பனை களைகட்டுகிறது. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர், எம்பாப்பே உள்ளிட்ட தங்களது ஆஸ்தான வீரர்களின் ஜெர்சிகளை வரிசையில் நின்று ரசிகர்கள் வாங்கி செல்கின்றனர். ஜெர்சி மற்றும் ஷார்ட்ஸின் விலை ரூ.600 முதல் 800 வரை விற்கப்படுகிறது. கொடி விலை ரூ.150 ஆகும்.  ரசிகர்கள் எவ்வளவு விலையேனும் கொடுத்து வாங்கிச்செல்ல தயாராக இருப்பதால் விலையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கால்பந்து உலக கோப்பையால் கத்தார் மட்டுமல்ல, இந்தியாவில் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டன.
 

click me!