அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் தனது நண்பர் ஆர்யா உடன் வந்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கே மிகப்பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினாலும், ஒரு சிலர் அந்த சமயத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றிருந்ததால் அவர்களால் வரமுடியாமல் போனது.
இந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் பிரபலங்கள் ஒவ்வொருவராக கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் நடிகர் விஷால் இன்று காலை 11 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் நடிகர் ஆர்யாவும் அவருடன் வந்து கேப்டன் சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்டாக மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யார்... யார்?- பிரதீப் ஆண்டனியும் வருகிறாரா?
அதன்பின்னர் விஷால் பேசுகையில், “பொதுவாக ஒரு மனிதர் மண்ணைவிட்டு மறைந்த பின்பு தான் அவரை சாமி என்று சொல்வோம். ஆனால் கேப்டன் உயிரோடு இருக்கும்போதே அவரை சாமினு கூப்பிட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர் செய்த விஷயங்கள் அந்த மாதிரி. நடிகர் சங்க பத்திரத்தை மீட்டெடுத்த விஜயகாந்த் எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்தார். நடிகராகவும், அரசியல்வாதியாகவும், சமூக சேவை செய்வது என அனைத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒருவர் என்றால் அது விஜயகாந்த் தான். என்னை மன்னிச்சிடு சாமினு தான் நான் சொல்லனும். அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத சூழலால் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
கேப்டன் இன்னைக்கு நம்மிடையே இல்லை என்றாலும் என்றைக்கும் நம் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார். நடிகர் சங்க கட்டிடத்துக்கு கண்டிப்பாக விஜயகாந்த் பெயர் சூட்டப்படும். நடிகர் சங்கத்துக்காக அவரின் உழைப்பு சாதரணமானது அல்ல. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருகிற ஜனவரி 19-ந் தேதி நடிகர் சங்கம் சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என விஷால் கூறினார்.
இதையும் படியுங்கள்... குமுதா ஹாப்பி அண்ணாச்சி... டெஸ்ட் என்னோட பெஸ்ட் படம் என நெகிழ்ந்த நயன்தாரா - காரணம் என்ன?