விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்தில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியான முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.
விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் வனிதா மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவரை தவிர மற்ற 5 பிள்ளைகளும் ஒற்றுமை உடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு திலன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது. இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது வைரலானது. இந்த நிலையில் தியா - திலன் திருமணம் கடந்த திங்கள்கிழமை பிரம்மாண்டமாக நடந்தது.
பந்தக்கால் நடுவது, மெஹந்தி விழா, சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் என கடந்த ஒரு வாரமே தியாவின் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது. நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடந்த தியா – திலனின் திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், பிரபு, சினேகே, பிரச்சன்னா, பாக்கியராஜ், மீனா, கே.எஸ். ரவிக்குமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
எனினும் இந்த திருமண விழாவில் வனிதாவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. வனிதா தனது குடும்பத்துடன் மீண்டும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று பலமுறை முயற்சித்த போதும் அவரை விஜயகுமார் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி இந்த திருமணத்தில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனிதாவுக்கும் அவரின் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்தவர் தான் ஸ்ரீ ஹரி. வனிதா தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் நீதிமன்றம் ஸ்ரீஹரியை தனது தந்தை உடன் இருக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர் தனது அப்பா மற்றும் தாத்தா வீட்டில் வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.