
தளபதி பட அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் விஜய் மாஸ்டர் படத்தில் வாத்தியாராக தோன்றி மாஸ் காட்டி இருந்தார். கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார். ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம் 75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளது. அதோடு விரைவில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்லவுள்ளது. அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன.
அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் 66 குறித்து பேட்டியளித்துள்ள இயக்குனர் வம்சி, இந்த புதிய படம் அரசியல் மற்றும் ஆக்ஷன் படம் கிடையாதென்றும், மனித உறவுகள் உணர்வுகள் சார்ந்த கதைக்களமே தனது பலம், இது நிச்சயம் விஜய் 66 -ல் இருக்கும் என தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாகவுள்ள கதாநாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்த வம்சி இது பெரும்பாலும் தமிழ் படத்தை போல தான் இருக்குமென குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும் என கூறியுள்ள வம்சி விஜயின் ரசிகர்களை மனதில் கொண்டே கதை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் விஜய் படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வரும் காரணமாகவே தெலுங்கு இயக்குனரின் படத்தில் விஜய் கமிட் ஆகியுள்ளார் என சொல்லப்படும் நிலையில் விஜய் 66 எந்த மாதிரியான வெற்றியை பெற்று தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.