அட்லீ தயாரிப்பில் உருவாக்கி வரும் தெறி படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தின் புதிய டீசர் ஒன்றை தற்போது படக்குழு ரிலீஸ் தேதியுடன் வெளியிட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம், 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜயின் மகளாக பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், அழகாலும், அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டார் நைனிகா. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சில காப்பி சர்ச்சைகளில் சிக்கினாலும், விமர்சனங்களை தாண்டி வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் ஏற்கனவே 'ஜவான்' படத்தின் மூலம் திறமையான இயக்குனர் என்பதை பதிவு செய்துவிட்ட இயக்குனர் அட்லி, 'தெறி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். அதன்படி 'ஏ ஃபோர் ஆப்பிள் ஸ்டூடியோ' சார்பில் அட்லீயின் மனைவி பிரியா, தெறி படத்தை தயாரிக்க உள்ளார். ஜீவாவை வைத்து 'கீ' படத்தை இயக்கிய இயக்குனர் காளீஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது.
மேலும் எமி ஜாக்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில், வாமிகா கபி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் மற்ற பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பேபி ஜான்', என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய நிலையில், தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
அதன்படி இப்படம், மே 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியாகி உள்ள புரோமோ வேற லெவலில் இருப்பதால்... படம் மீதான எதிர்பார்ப்பு கூறி உள்ளது.