வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் தளபதியின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய்யின் 68-வது படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர்.
கோட் படத்தில் விஜய்யுடன் சினேகா, மோகன், வைபவ், நிதின் சத்யா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் அப்டேட்டுகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... VIJAY : எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு நடிகர் விஜய் திடீர் உத்தரவு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்பாடலை விஜய் பாடி இருந்தார். ஆனால் இப்பாடல் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதுதவிர மேலும் ஒரு பாடலையும் விஜய் இப்படத்தில் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடுவது இதுவே முதன்முறை ஆகும். இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று கோட் பட அப்டேட்டுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது அப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
அதன்படி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று தி கோட் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சின்ன சின்ன கண்கள் என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாடல் சொதப்பிய நிலையில், இப்பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சர்வதேச யோகா தினம்.. சமந்தா முதல் ராஷ்மிகா வரை.. யோகா மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகைகள்..