நடிகை துளசி - பிரபாஸ் ஸ்ரீனு காதலிப்பதாக வதந்தி ஒன்று பரவி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதற்க்கு பிரபாஸ் ஸ்ரீனு முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக இருக்கும், பிரபாஸ் ஸ்ரீனுவும், நடிகை துளசியும் கடந்த ஆண்டு ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இருவரும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து பேசியதை வைத்து, சிலர் இருவரும் காதலித்து வருவதாக கொளுத்தி போட்டனர். அதே போல் இந்த வதந்திக்கு ரசிகர்கள் பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தாலும், பிரபாஸ் ஸ்ரீனு மற்றும் துளசி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
சமீபத்தில் பிரபாஸ் ஸ்ரீனு, கொடுத்த பேட்டி ஒன்றில், துளசி பற்றிய காதல் சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும் துளசிக்கும் தனக்கும் எப்படிப்பட்ட உறவு என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "துளசி எனக்கு அம்மா மாதிரி. எங்களைப் பற்றி பொய்யான வதந்திகள் வெளியாகின. டார்லிங் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது, அவர் என் மீது அக்கறை காட்டுவர். மேலும் அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். படப்பிடிப்பின் போது அன்பே என்று கேலியாக அழைப்பார். அதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். எங்களைப் பற்றி வதந்திகள் வந்தபோது இதுகுறித்து அவர் தான் முதலில் பதிலளித்தார். அதே போல் இது போன்ற வதந்திகளை உன் மனைவியிடம் சொல்லாதே, அவர் மிகவும் வருத்தப்படுவார் என கூறினார்.
என் மனைவி மிகவும் பக்குவமான மனப்பான்மையுடையவர். என்னை பற்றி நன்கு அவருக்கு தெரியும் அவர் ஒரு மருத்துவர். நான் அவளை காதல் திருமணம் செய்து கொண்டேன். எனவே இதுபோல் காற்றில் பறக்கும் வதந்திகளை அவள் நம்பவில்லை. இதை கேட்டு சிரித்தார் என தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்ரீனு தெரிவித்துள்ளார்.
நடிகை துளசி, தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குனர் சிவமணி என்பவரை திருமணம் செய்து கொண்ட துளசி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், ஆம்பள, கத்துக்குட்டி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.