90ஸ் கிட்ஸின் ஃபேவரட் தொடரான 'சக்திமான்' படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், கூறப்பட்ட தகவலுக்கு உண்மையை உடைத்து கூறியுள்ளார் முகேஷ் கண்ணா.
1997 இல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது 'சக்திமான்' தொடர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த தொடர் பல குழந்தைகளின் ஃபேவரட். சூப்பர் ஹீரோ பற்றிய கதைக்களத்தை கொண்ட இந்த தொடரை, இயக்குனர் தின்கர் ஜெயின் இயக்கிய நிலையில், இந்த தொடரை நடித்து, தயாரித்திருந்தார் முகேஷ் கண்ணா.
இந்நிலையில் முகேஷ் கண்ணா சமீபத்தில், தன்னுடைய சூப்பர்ஹிட் சீரியலான சக்திமானை மனதில் வைத்து படம் எடுக்கப்போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை இதற்கான ஆரம்ப பணிகள் துவங்கவில்லை.
அதிர்ச்சி... விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த 'கசான் கான்' மரணம்!
முகேஷ் கண்ணா சக்திமானை மையமாக வைத்து இயக்கும் படத்தில் ரன்வீர் சிங் தான், சக்திமான் வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஆனால் தற்போது வரை இந்த தகவல் குறித்து, ரன் வீர் சிங் தரப்பில் இருந்தோ, முகேஷ் கண்ணா தரப்பில் இருந்தோ எந்த ஒரு பதிலும் தெரிவிக்காத நிலையில், பலர் இந்த தகவல் உண்மை தானோ? என கேள்விகளையும் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இப்படி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முகேஷ் கண்ணா தனது சக்திமான் படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முகேஷ் கண்ணா தனது யூடியூப் சேனலான பீஷ்மாவில் இது குறித்து கூறியுள்ளதாவது, 'சக்திமான் படம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது ஒரு பிரமாண்ட படம். 200-300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் மூலம் இந்தப் படம் தயாரிக்கப்படவுள்ளது. இருந்தாலும் அதன் பணிகள் கொஞ்சம் தாமதமாகும். முதலில் கொரோனா தொற்று வந்தது, பிறகு நான் எனது சேனலைத் தொடங்கினேன், பிறகு இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்பு நான் இது ஒரு சிறிய படம் என கூறி இருந்தேன். ஆனால் இது மிகப்பெரிய படமாக இருக்கும். எனவே இந்தப்படம் உருவாக இன்னும் கால அவகாசம் எடுக்கும். இந்தப் படத்தைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதை தவிர என்னால் மற்ற தகவல்களை இப்போதைக்கு கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதே போல் பலர் நான் சக்திமானாக இருப்பேனா என்ற கேள்வி கேட்கிறார்கள்? சக்திமான் ஆகப்போவது யார்? என்பதை என்னால் இப்போது வெளியிட முடியாது. ஆனால் இது ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். ஆனால் நான் இருப்பேன். நான் இல்லாமல் அவரால் சக்திமான் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என பேசியுள்ளார்.