சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைக்க சென்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 48-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதவி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. இப்படி தடபுடலாக சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மோபுரிவாரிபாலம் என்கிற கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த லே பங்ளூரைச் சேர்ந்த போளூரி சாய் என்பவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தயாராகி வந்தனர். இதையொட்டி நேற்று இரவு நரசராவ்பேட்டையில் சூர்யா பிறந்தநாள் பேனரை வைக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... மாஸ் லுக்கில் மிரட்டும் சூர்யா! வெளியானது கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!!
அப்போது அந்த பேனரை கட்டிக் கொண்டிருக்கும் போது பிளக்ஸ் பேனரில் உள்ள இரும்பு பிரேமில் மின்கம்பி உரசியதில் இருவருமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நரசராவ்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இருவருமே கல்லூரி மாணவர்கள் ஆவர். இருவரும் ஒன்றாக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நரசராவ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் கட்டிய போது ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... தன்னைத் தானே செதுக்கியவன் ‘சூர்யா’ பர்த்டே ஸ்பெஷல்... கங்குவா நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?