Singer Sangeetha Rajeshwaran : தமிழ் திரையுலகில் மிகக்குறைவான அளவில் பாடல்களை பாடியிருந்தாலும், அவை அனைத்துமே ஹிட் பாடல்களாக மாறுவது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் 5 சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகி தான் சங்கீதா ராஜேஸ்வரன்.
தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான "சுக்கிரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் விஜய் ஆண்டனி. அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அவருடைய இசையில் மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "டிஷ்யூம்" அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஒலித்த "டைலமோ டைலமோ" என்கின்ற பாடல் அந்த காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பாடலாகும்.
இந்நிலையில் இந்த பாடலின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர்தான் சங்கீதா ராஜேஸ்வரன். விஜய் ஆண்டனியின் நண்பர் மூலம் அவருக்கு அறிமுகமாகிய அவர், மிகக் குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே பாடியுள்ளார் என்ற போதும் இவருடைய குரலுக்கு என்று ஒரு தனி வரவேற்பு உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி இசையில் வெளியான "நான் அவன் இல்லை" திரைப்படத்தில் வரும் "ஏன் எனக்கு மயக்கம்" என்கின்ற பாடலை பாடியதும் இவர் தான்.
அதேபோல 2009 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "வேட்டைக்காரன்" படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒலித்த "கரிகால போல சோழன் போல" என்கின்ற பாடலையும் இவர் பாடியிருந்தார். மேலும் தளபதி விஜயின் "வேலாயுதம்" படத்தில் வரும் "மாயம் செய்தாயோ" என்கின்ற பாடலையும், விஜய் ஆண்டனி இசையில் வெளியான "வெடி" திரைப்படத்தில் "இச்சு இச்சு இச்சு கொடு" என்கின்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.
இது மட்டுமல்ல பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற நாடகத்தின் டைட்டில் சாங்கான "எண்ணை தேடி காதல் என்று வார்த்தை அனுப்பு" என்கின்ற பாடலை பாடியதும் இவர்தான்.