மகாராஷ்டிர துணை முதல்வர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கருத்து தெரிவித்து தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ள ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகர் குணால் கம்ரா, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய போது போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
நடிகர் குணால் கம்ரா மீது மும்பையில் உள்ள கர் காவல் நிலையத்தில், மகாராஷ்டிர துணை முதல்வர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்ட நிலையில், காம்ரா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
'நயா பாரத்' என்ற அவரது புதிய ஸ்டாண்ட்-அப் வீடியோ ஒளிபரப்பப்பட்ட பிறகு, கம்ராவுக்கு வந்த கொலை மிரட்டல்களைக் குறிப்பிட்டு அவரது வழக்கறிஞர் வி. சுரேஷ், குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க கூறி நீதி மன்றத்தில் வாதிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த குணால்... தனக்கு எதிராகப் போடப்பட்ட இந்த FIR ஒரு “அற்பமான புகார்” என்றும், கருத்துச் சுதந்திரத்திற்கான தனது, உரிமையைப் பயன்படுத்துவதற்காக ஒரு கலைஞரை “துன்புறுத்தவும், மிரட்டவும், ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டிருந்தார்.
காம்ரா தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளது என்று கூறப்பட்டது. எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதி சுந்தர் மோகன், ஜாமீன் பெற காம்ராவை வானூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, இன்று காலை 10:30 மணியளவில் வானூர் நீதிமன்றத்தில் கம்ரா ஆஜரானார், அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று ஆஜராகும் போது குணால் நீதிபதி முன்னிலையில் போலீசார் தன்னை கைது செய்வதில் தீவிரமாக இருப்பதாக குற்றம்சாட்டிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.