ஊமை பெண்ணின் கனவு... கவிதையாய் மொழி பெயர்த்த கண்ணதாசன்..!

By Thiraviaraj RM  |  First Published Apr 1, 2020, 8:30 PM IST

அவள் மட்டும்தான் இப்படித் தவிக்கிறாளா..? பறவைகள், ஏன்.. பரம்பொருளுக்குமே கூட, வெளியில் சொல்லவோ, சொன்னாலும் புரிந்து கொள்ளவோ யார் இருக்கிறார்...? 



திரைப்பாடல் - அழகும் ஆழமும்-3

என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் ஒரு தனி ரகம். ஒரு பெண்ணின் மனதை நயமாக சொல்வதில், இந்த ஆண் கவிக்கு இணை யாருமே இல்லை. எத்தனையோ சங்கடங்கள்.. என்னென்னவோ பிரசினைகள். எல்லாவற்றையும் விட பெரிய சங்கடம்,  தனக்குள்ள பிரசினையை வெளியில் சொல்ல முடியாத நிலை. 

Tap to resize

Latest Videos

வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியாத, கவலை குறித்து கலந்தாலோசிக்க முடியாத அவலம். அதுவும், இளமையின் உச்சத்தில் நிற்கும் யுவதி - தனித்திறமையுடன் பொது வெளியில், தனிமரமாய் நிற்கிறாள். இந்த நிலையை என்னவென்று சொல்ல..? கண்ணதாசனுக்கு தெரிந்து இருக்கிறது. "ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள்". ஆகா....! என்னவொரு அமரத்துவம் பெற்ற வரி!

இந்தப் பாடலைக் கேட்கிற யாருக்கும், வெளியில் சொல்லத் தெரியாத சோகம் உள்ளத்தில் வந்து சூழும். பாடலைக் கேட்கிற ஒவ்வொருவரையும் 'உள்ளத்தில் வைத்தே வாழுகிற பெண்ணாய் மாற்றுகிற வித்தை - கண்ணதாசன் நடத்திக் காட்டுகிற, அபாரமான கண்ணாமூச்சி விளையாட்டு. அவள் மட்டும்தான் இப்படித் தவிக்கிறாளா..? பறவைகள், ஏன்.. பரம்பொருளுக்குமே கூட, வெளியில் சொல்லவோ, சொன்னாலும் புரிந்து கொள்ளவோ யார் இருக்கிறார்...? குழந்தையின் எண்ணமும் குலமகளின் ஆசையும் அப்படித்தான்! 

கொடிமலராய் இருந்து ஒரு நாள் மகிழலாம்; காற்றாய்த் தவழ்ந்து ஒவ்வொரு நொடியும் வாழலாம். வாய்க்கவில்லையே..!  இந்த மனிதர்கள்... தமக்கென்று ஒரு 'தர்மம்' வைத்து இருக்கிறார்கள்.  அதை அவள் மீறத் தயாராக இல்லை; அதில் கலந்து, சங்கடத்தை ஏற்றுக் கொள்கிறாள். உண்மையில், இதுதான் அவளின் 'தர்ம சங்கடம்'!! 'விண்ணில் பறக்க' திறன் இல்லாமல், மண்ணில் தவிக்கிறாள்.   1963இல் வெளியான திரைப்படம் - வானம்பாடி. கதாநாயகி தேவிகா. 

உள்ளுக்குள் இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு, பொது மேடையில், சிரித்த முகத்துடன் பாடுகிற போது... அடடா.. என்னவொரு நடிப்பு! 

பின்னணி பாடியவர்...? வேறு யார்? 
தேன் குரலுக்குச் சொந்தக்காரர் - பி. சுசீலா.
இசை அமைப்பு: அமரர் கே.வி.மகாதேவன். 

இன்னொரு சிறப்பு: இந்தப் பாடலை, ஒரு முறை கேட்டிருந்தாலும் போதும். பாடல் வரிகளைப் படிக்கிற போது, உள்ளுக்குள், சோககீதம் தானே இசைக்கும். அதுதான் கண்ணதாசன்! அதுதான் பி. சுசீலா! அதுதான் கேவிமகாதேவன்!

இதோ அந்தப் பாடல்:   


ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் - அதை 
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள். 
வெளியே சொல்லவும் மொழி இல்லை.
வேதனை தீரவும் வழி இல்லை. 

பறவைகள் நினைப்பதை யாரறிவார்? அந்த 
பரம்பொருள் இதயத்தை யாரறிவார்?
குழந்தைகள் எண்ணத்தை யாரறிவார்? அந்த 
குலமகள் ஆசையை யாரறிவார்?

உயரத்தில் கொடியில் மலர்ந்திருந்தால் அவள் 
ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள். 
உலவும் காற்றாய் பிறந்திருந்தாலும் 
ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள். 

மானிட சாதியில் பிறந்து விட்டாள் அவள் 
மானிட தர்மத்தில் கலந்து விட்டாள். 
மண்ணில் வாழவும் முடியவில்லை அந்த 
வானத்தில் பறக்கவும் சிறகில்லை.

 

(வளரும்.

 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:-

அதியாயம்-01:-உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்... அன்றே சொன்ன கண்ணதாசன்..!

அத்தியாயம்-02:-எந்த ஹீரோவும் இப்படி செய்ததுண்டா..? எம்.ஜி.ஆரை போல முடியுமா..?
 

click me!