தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி மற்றும் நர்கீஸ் தத் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் உயரிய சினிமா விருதாக கருதப்படுவது தேசிய விருது. மத்திய அரசு வழங்கும் இந்த விருது ஒவ்வொரு ஆண்டு திரைத்துரையில் வியத்தகு படைப்புகளை கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி ஜனவரி 30-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் தேசிய விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை ஆகியவை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரைப்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த ‘சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது’ தற்போது ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குனருக்கான விருது’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகை இதற்கு முன்னர் வரை தயாரிப்பாளர், மற்றும் இயக்குனருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இயக்குனருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... "தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சு".. விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட தகவல்!
அதேபோல் பழம்பெரும் நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வந்த ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத் விருது’ தற்போது ‘தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தாதா சாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கு வழங்கப்படும் ஸ்வர்ன் கமல் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், ரஜத் கமல் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் சிறந்த ஒலி வடிவமைப்பு விருதுக்கான பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... நோ சொன்ன மிருணாள் தாக்கூர்... முருகதாஸ் படத்தில் டிரெண்டிங் ஹீரோயின் உடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்