
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் எனும் ஊரில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர் நா.முத்துக்குமார். சிறு வயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்கிற விருப்பத்துடன் சென்னைக்கு வந்த அவர், பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த பின்னர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய ‘வீரநடை’ என்கிற படத்தின் மூலமாக பாடலாசிரியராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
நா.முத்துக்குமாரின் பாடல்கள் எளிய வார்த்தைகளால் நிரம்பியிருந்த போதிலும், ஆழமான கருத்துக்களைக் கொண்டிருந்தன. அவரது பாடல்களுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்..” என்ற பாடலும், ‘சைவம்’ படத்தில் வரும் “எதுவும் அழகே..” பாடலும், ‘வெயில்’ படத்தில் வரும் “வெயிலோடு விளையாடி..” பாடலும், ‘சிவாஜி’ படத்தில் வரும் “பல்லேலக்கா..” போன்ற பாடல்கள் மிக பிரபலம். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்கும் அவர் வசனம் எழுதியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் பல கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், நாவல்கள், ஹைக்கூ கவிதைகள், பத்திரிக்கை தொடர்கள் என பன்முக திறமையாளராக வலம் வந்தார். ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘சைவம்’ படத்திற்காக இரண்டு முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும், பல ஃபிலிம் பேர் விருதுகளையும், தமிழக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், தனது 41 வது வயதில் காலமானார். அவரது மரணம் தமிழ் திரையுலகிற்கும், இலக்கிய உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரைப் பற்றி எப்போதும் யாராவது நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம். அந்த வகையில் எழுத்தாளர் பவா செல்லதுரை நா.முத்துக்குமாரின் வாழ்வில் நடந்த சோகமான சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
பவா செல்லதுரை நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது, நா முத்துக்குமார் மிக எளிமையான வாழ்வியலை வாழ்ந்த ஒரு மனிதர். அவரை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றுவிடலாம். அந்த அளவிற்கு எளிமையான வாழ்வியலை வாழ்ந்தார். அவரது மனதில் மிகப்பெரிய போராட்டம் இருந்து கொண்டே இருந்தது. நான் சிறந்த பாடலாசிரியரா அல்லது கவிஞரா என்ற கேள்வி அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. தமிழ் திரையுலகில் முத்துக்குமார் அளவிற்கு தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த ஒரு வாசிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு பெரிய புத்தகத்தை கொடுத்தாலும் இரண்டு நாட்களில் வாசித்து முடித்து விடுவார். அவருடைய படைப்புகளுக்கும், வார்த்தைகளுக்காக ஏங்கி நிற்கும் நிலை இல்லாததற்கும் இதுவே காரணமாக இருந்தது.
சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன கால புத்தகங்கள் வரை அனைத்தையும் அவர் வாசித்து வந்தார். அவரது வாழ்வில் ஒரு கசப்பான சம்பவம் நடந்தது. 7 வயது இருக்கும் பொழுது அவர் தனது தாயை இழந்துவிட்டார். இந்த விஷயத்தை அவர் என் வீட்டில் என் என் மடியில் படுத்துக்கொண்டு கூறினார். “ஏழு வயதாக இருக்கும் பொழுது எனது அம்மா இறந்து விட்டார். இறப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த வயது. அம்மாவை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள். குழந்தையாக இருந்த நான் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தேன். அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரில் இருந்து கரும்பை உடைத்து சாப்பிட கொடுத்தார்கள்.
அதன் பின்னர் கரும்பு சாப்பிடும் பொழுதெல்லாம் அம்மாவை இழந்தது தான் நினைவுக்கு வரும். அம்மா மரணத்தின் கசப்பை விழுங்க வேண்டும் என்பதற்காக எனக்கு கரும்பை கொடுத்தார்கள். அதனால் தான் நான் கரும்பை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன் என்று அழுதபடியே முத்துக்குமார் பவா செல்லதுரையிடம் கூறி இருக்கிறார். இதை பவா செல்லதுரை அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் பேசிய பவா செல்லதுரை, “முத்துக்குமாரைப் போல குழந்தைகளை நேசித்தவரை நான் பார்த்ததே இல்லை. ஒருநாள் முத்துக்குமாரின் செல்போனை அவரது மகன் கொதிக்கும் சாம்பாரில் போட்டு விட்டார். ஆனால் முத்துக்குமார் மகனை அடிக்கவில்லை, திட்டவில்லை, எதுவுமே சொல்லவில்லை. வேறு செல்போன் வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக கூறினார்.
அதற்கு நான் குழந்தைகள் மீது இவ்வளவு பாசம் வைக்க கூடாது என்று அறிவுரை கூறினேன். அதற்கு முத்துக்குமார், “குழந்தை என்றால் போனை எடுத்து இப்படித்தான் போடும்” என்றார். அவ்வளவு பாசம் வைத்த அந்த குழந்தைகள் இன்று தகப்பன் இல்லாமல் வாழ்கிறார்கள் என கண்ணீருடன் பேசி முடித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.