
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ‘குபேரா’. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது. படம் குறித்து பலரும் பாசிட்டி விமர்சனங்களை கூறி வரும் நிலையில், பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன் கடலில் எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். இந்த எண்ணையை கொண்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். இதை வெளியே கொண்டு வர மந்திரி ஒருவருடன் டீல் பேசப்படுகிறது. எண்ணெய் எடுப்பதற்கு ரூ.1 லட்சம் கோடி வரை கைமாற்றப்படுகிறது. அதில் ரூ.50,000 கோடி கருப்பு பணமும், ரூ.50,000 கோடி வெள்ளைப் பணமும் டீல் பேசப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை கை மாற்றுவதற்கு ஒரு தேர்ந்த அதிகாரி வேண்டுமென மந்திரி தரப்பில் கூறப்படுகிறது.
பணத்தை கை மாற்றி விடுவதற்கு முன்னாள் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நாகார்ஜுனா வரவழைக்கப்படுகிறார். கருப்பு பணத்தை மாற்றும் பொழுது நாம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு பிச்சைக்காரர்களை பயன்படுத்தலாம் என அவர் அறிவுரை கூறுகிறார். இதற்காக அவர் நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கிறார். அதில் கீழ் திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷும் ஒருவர். அதன் பின்னர் என்ன நடந்தது? பிச்சைக்காரராக இருக்கும் தனுஷ் குபேரனாக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் சிபிஐ அதிகாரியாக வரும் நடிகர் நாகார்ஜுனா தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கீழ் திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் மும்பைக்கு கோடீஸ்வரர் ஒருவரிடம் செல்கிறார். அவருக்கு பினாமியாக மாறுகிறார். அவர் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறாக படத்தின் முதல் பாதி மிக வேகமாக நகர்கிறது. கடலில் எண்ணெய் கிடைக்கிறது, அந்த எண்ணையை அரசாங்கத்திற்கு செல்லாமல் அரசை எப்படி ஏமாற்றுவது, பணத்தை எப்படி கை மாற்றுவது, பல்லாயிரம் கோடியை எப்படி பரிமாற்றம் செய்வது, பிச்சைக்காரர்களை எப்படி பினாமியாக பயன்படுத்துவது என முதல் பாதி மிக வேகமாக நகர்கிறது. ஆனால் இரண்டாவது பாதி மிக மெதுவாக நகர்கிறது. இரண்டாவது பாதியில் படம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இரண்டாவது பாதியில் லாஜிக் என்பது சுத்தமாக இல்லை. லாஜிக் எங்கே என்று கேட்டால், அதெல்லாம் கேட்கக் கூடாது இஷ்டம் இருந்தால் பாரு இல்லை என்றால் கிளம்பு என்று கூறுவது போல படத்தில் ஏகப்பட்ட லாஜெட் மிஸ்டேக்குகள் இருந்தது. கிளைமாக்ஸ்-ல் வரும் ஒரு காட்சியை நம்பலாமா வேண்டாமா என்கிற அளவிற்கு அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதற்காகத்தான் படத்தை 2.30 மணி நேரங்களில் எடுத்து முடித்திருக்க வேண்டும். ஆனால் மூன்று மணி நேரம் படத்தை எடுப்பது ரசிகர்களை சோர்வடைய வைத்து விட்டது. தனுஷ் என்கிற ஒற்றை மனிதனின் தலையில் இந்த படம் முழுவதும் சுமத்தப்பட்டு விட்டது. இரண்டாவது பாதி முழுவதும் தன் தலையில் இந்த படத்தை தனுஷ் சுமந்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் சுத்தமாக ஒட்டவில்லை. பல இடங்களில் காட்சிகள் உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவே இல்லை. ஒரு இடத்தில் தனுஷ் அழும் காட்சிகள் கூட எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராஷ்மிகா மந்தனா எதற்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் லூசா? வெகுளி பொண்ணா? அறிவாளியா? என்பதே சரியாக வடிவமைக்கப்படவில்லை. அவர் திடீரென்று காட்சிகளில் தோன்றுகிறார். திடீரென்று காணாமல் போகிறார். எனவே ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை.
ஒரு இடத்தில் தனுஷும் ராஷ்மிகாவும் பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் வரும். அதில், “ஓடிக்கிட்டே இருக்கோம், ஓடிக்கிட்டே இருக்கோம்” என பேசிக்கொள்வார்கள். அதேபோல் ரசிகர்களும் எதற்கு இந்த படத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எனத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். படத்தின் நேரத்தைக் குறைத்து இருந்தால் இந்த படம் மிகச் சிறப்பானதாக வந்திருக்கும். நடிப்பு அரக்கன் தனுஷ் நடிக்கிறார், அவரிடம் இருந்து நடிப்பை வாங்க வேண்டும் என்பதற்காக இத்தனை காட்சிகளை இயக்குனர் வைத்தாரா என்பது தெரியவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர்தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளரா என்கிற கேள்வியும் மனதிற்குள் எழுகிறது.
மூன்று மணி நேரம் இரண்டு நிமிடம் எதற்காக இந்த படம் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வருவதற்கு 5 மணி நேரம் செலவு செய்து பார்க்க வருகின்றனர். ஒரு படத்திற்காக 5 மணி நேரம் செலவு செய்கிறார்கள் என்றால் அந்த படம் ரசிகர்களுக்கு எவ்வளவு திருப்தி கொடுக்க வேண்டும்? ஆனால் இந்த காலநேர விரயம் என்பது ரசிகர்களிடையே ஒரு சோர்வான மனநிலையைக் கொடுக்கிறது. எப்படி இருப்பினுத் தனுஷுக்காக இந்த படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்று தனது விமர்சனத்தை கூறி முடித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.