கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ்... தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் 'மெளனகுரு' & 'மகாமுனி' புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களால் சிறந்த இயக்குனர் என தன்னுடைய திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான 'மெளன குரு' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல் அவரது இரண்டாவது படமான 'மகாமுனி', பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.
இந்த இரு படங்களை தொடர்ந்து, இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய முரையில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான 'மகாமுனி' மற்றும் 'மெளனகுரு'. இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும் என தெரிவித்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.
தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன். 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் வில்லனாக முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, இந்தப் படத்தில் ஹீரோவாக தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.