Actor Nagarjuna : மாலத்தீவில் தனது விடுமுறையை கழிக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜுனா.
டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனா, சமீபத்தில் தனது 'நா சாமி ரங்கா' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் மாலத்தீவு-லட்சத்தீவு பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், அவர் மாலத்தீவு செல்லும் தனது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக பங்காரம் தீவுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு நேர்காணலில் இந்திய பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் பாடலாசிரியர் எம்.எம்.கீரவாணியுடன் அவர் உரையாடினார். அப்போது பேசிய அவர், ஜனவரி 17ஆம் தேதி தான் மாலத்தீவுக்கு செல்லவிருப்பதாக கூறினார். தெலுங்கு "பிக் பாஸ் மற்றும் 'நா சாமி ரங்கா' நிகழ்ச்சிகளுக்காக கடந்த 75 நாட்கள் இடைவேளையின்றி உழைத்தேன். அதற்காக குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்லவிருந்தேன். ஆனால் இப்போது, எனது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன், அடுத்த வாரம் லட்சத்தீவு செல்ல உள்ளேன்" என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், "பயத்தினாலோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை நான் கேன்சல் செய்யவில்லை. அங்கு செல்வது ஏற்புடையதாக இருக்காது என்று எண்ணி தான் கேன்சல் செய்தேன் என்றார் அவர். நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியுள்ளார், அது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்று என்று அவர் கூறினார்.
அவர் தான் எங்கள் பிரதமர், அவர் 1.5 பில்லியன் மக்களை வழிநடத்துகிறார், அவர் 1.5 பில்லியன் மக்களுக்குத் தலைவர், அவரை பற்றி பேசி அவர்கள் (மாலத்தீவு) பின்விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது" என்றார் அவர். மேலும் பேசிய அவர் லட்சத்தீவில் உள்ள பிரபலமான பங்காரம் தீவுகளின் இயற்கை அழகைப் பாராட்டினார்.நீங்களும் அங்கு செல்ல திட்டமிடுங்கள் என்று எம்.எம். கீரவாணியிடம் கூறியுள்ளார் நாகர்ஜுனா.