மறைந்த நடிகர் முரளியின் மகள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் என்பவர் பூவிலங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் முரளி. கன்னட தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்தலிங்கையாவின் மகன் தான் இந்த முரளி. தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே ஒரு சில கன்னட படங்களில் முரளி நடித்திருந்தார்.
1984-ம் ஆண்டு வெளியான பூவிலங்கு படத்தில் முரளி, குயிலி, மோகன், செந்தாமரை, சார்லி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த பிறகு தான் மோகன் பூவிலங்கு மோகன் என்று அழைக்கப்பட்டார். அதே போல் குயிலுக்கும் இந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இளையராஜா இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. அதிலும் ‘ ஆத்தாடி பாவாடை’ என்ற பாடல் இன்றளவும் பலரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
தொடர்ந்து பகல் நிலவு, வண்ண கனவுகள், இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றி கொடி கட்டு, சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். ஹீரோக்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் முரளி.
முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த தோற்றத்தில் முரளி நடித்திருந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னே உயிரிழந்தது திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
முரளிக்கு மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது பிறந்தவர் அதர்வா, மூன்றாவது ஆகாஷ் என்ற மகன் பிறந்தார். இதில் அதர்வா நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதர்வாவின் தம்பி ஆகாஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார். முரளியின் 2-வது மகனும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சரி, முரளியின் மகள் காவ்யா என்ன செய்கிறார் தெரியுமா? அவர் ஒரு டாக்டர். சென்னை காவேரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக காவ்யா பணியாற்றி வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஆதித்யா என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது கணவர், பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.