’காவல்துறை அதிகாரியை செருப்புக் காலோடு நெஞ்சில் எட்டி மிதிப்பதா?’...வலுக்கும் எதிர்ப்பு...

By Muthurama LingamFirst Published Apr 4, 2019, 11:38 AM IST
Highlights

காவல்துறையினரை மட்டரகமாகச் சித்தரிக்கும் சினிமா பட போஸ்டர்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கேரள போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காவல்துறையினரை மட்டரகமாகச் சித்தரிக்கும் சினிமா பட போஸ்டர்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கேரள போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மலையாள படம் 'லூசிபர்’. இந்த படத்தை நடிகர் பிரித்விராஜே இயக்கியிருக்கிறார். ’லூசிபர்’ கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில் மோகன்லால் சண்டைக் காட்சிகளில் அதிரடிகாட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக போலீஸ் அதிகாரி ஒருவரை மோகன்லால் நெஞ்சில் செருப்புக் காலுடன் எட்டி மிதிக்கும் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

இந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படக்குழுவினர்  இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். இதனை கேரள போலீஸ் சங்கம் கண்டித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. அந்த மனுவில், “மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசைத் தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவதும் தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேரள போலீஸாரின் இந்தப் புகாரை பொதுமக்கள் ரசிக்கவில்லை. வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர். ‘செருப்புக் காலோட போலீஸை தாக்குறதை மக்கள் ரசிக்கிறாங்கன்னா அந்த அளவுக்கு உங்க மேல மக்களுக்கு வெறுப்பு இருக்கு. முதல்ல அதைச் சரி பண்ணுங்க ஆபிசர்ஸ்’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

click me!