கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாதது என் வாழ்நாள் முழுக்க பிழையாகவே இருக்கும் - கண்கலங்கிய கார்த்தி

By Ganesh A  |  First Published Jan 4, 2024, 9:08 AM IST

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் கார்த்தியும் அவரது தந்தை சிவக்குமாரும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.


விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், இன்று காலை கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாததற்கு கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து பேசினார் கார்த்தி.

Latest Videos

undefined

அவர் பேசியதாவது : “கேப்டன் நம்மகூட இல்லங்கிறத ஏத்துக்க முடியல. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மரியாதை செய்யமுடியாதது எனக்கு வாழ்நாள் முழுக்க ஒரு பிழையாகவே இருக்கும். கேப்டன் உடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததில்லை. அவர் போலீசா நடிச்சா அந்த படத்தை தவறாமல் 10 தடவையாச்சும் பார்ப்பேன். நான் நடிகர் சங்கத்துல ஜெயிச்சதுக்கு அப்புறமா கேப்டனை சந்திக்கும்போது அவ்வளவு சந்தோஷமா பேசுனாரு. நடிகர் சங்கத்தில் நாங்கள் பெரிய சவால்களை சந்திக்கும்போது அவரை நினைத்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்... சூர்யா திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க சென்ற சிவகுமார்! வர முடியாது என கூறிய கேப்டன்.. ஏன் தெரியுமா?

ஒரு தலைவன் என்றால் முன் நின்று வழிநடத்த வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை அவரை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். பெரிய ஆளுமை நம்முடன் இல்லைங்கிறது பெரிய வருத்தமாக உள்ளது. அவரை எப்போதும் மிஸ் பண்ணிக்கிட்டே இருப்போம். அவர் எப்போதும் எங்கள் மனதில் இருப்பார். வருகிற ஜனவரி 19ந் தேதி நடிகர் சங்கம் சார்பாக கேப்டனுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அவருடைய புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும் வகையில் நாங்க செய்ய வேண்டிய விஷயங்களையும் அதுல சொல்வோம். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கண்ணீர்மல்க பேசினார் கார்த்தி.

தொடர்ந்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் பேசுகையில், எம்ஜிஆரைப் போலவே கலை உலகத்திலும், அரசியலிலும் மக்களுடைய பேராதரவை பெற்றவர் என்னுடைய அன்பு சகோதரர் விஜயகாந்த். இந்த மண் உள்ள வரை அவரை யாருமே மறக்க முடியாது. வருங்கால முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர் கேப்டன் என தளதளத்த குரலோடு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் சிவக்குமார்.

இதையும் படியுங்கள்... ராசாவே உன்ன காணாத நெஞ்சு... கேப்டன் மறைவுக்கு பாட்டுப் பாடி அஞ்சலி செலுத்திய கேப்டன் மில்லர் தனுஷ்

click me!