43 வருஷத்துக்கு அப்புறமா அதே பீலிங்ஸ்... மனம் திறந்து பேசிய ரஜினி

By sathish kFirst Published Nov 28, 2018, 9:30 PM IST
Highlights

 43ஆண்டுகளுக்குப் பிறகு எனது முதல் படம் பார்க்க எவ்வளவு ஆர்வமாக இருந்தேனோ அதே போல் இப்போது   2.0 படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான படமான 2.0 படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி 2.0 படக் குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில்  ஹீரோ ரஜினிகாந்த், வில்லன் அக்‌ஷய் குமார், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், “தெலுங்கு மக்கள் எப்போதும் நல்லவர்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். தெலுங்குலகின் உணவு வகைகள் உலக பிரசித்தமானது. அதேபோல் தெலுங்கு இசையும் ஆனந்தமயமானது. இந்தச் சுந்தரத் தெலுங்கின் பெருமையை தமிழின் மகாகவி பாராட்டி இருக்கிறார்.

எந்திரன் படம் எடுத்தபோது அந்த முழு படத்தையும் 3Dயில் மாற்ற முயன்றோம். ஆனால் முடியவில்லை. ஆனால் இந்த ‘2.0’ படம் 3Dயில்தான் வருகிறது. இது ஷங்கர் செய்திருக்கும் சாதனை. இந்தப் படத்தின் கதையை ‌ஷங்கர் என்னிடம் சொன்னதும் இதை அவரால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு எழவே இல்லை. அவரால் முடியும் என்ற நம்பிக்கைதான் எனக்குள் இருந்தது.

பாகுபலி படத்தில் கதையும் பிரமாண்டமும் இருந்ததால் உலக அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றது. அதுபோல் இந்த 2.0 படமும் புதிய தொழில் நுட்பத்தில் பேசப்படும் படமாக இருக்கும். இது 100 சதவீதம் பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். 2.0 படத்தை நான் பார்த்த பிறகு ‘மக்களே இந்த படத்தை விளம்பரப்படுத்துவார்கள்’ என்றேன். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் மக்கள் ரசிக்கும் வி‌ஷயங்கள் நிறையவே இருக்கிறது.

இந்தப் படத்தில் 45 சதவீதம் விஷுவல் எபெக்ட் உள்ளது. பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் உள்ளன. இங்கே திரையிடப்பட்ட டிரெய்லர், பாடல் காட்சிகளெல்லாம் சும்மா சாம்பிள்தான். 2.0 படம் நிச்சயமாக தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிசயிக்க வைக்கும். ஆச்சரியம் ஏற்படுத்தும். இந்திய சினிமா துறைக்கே பெருமையை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்.

1975ஆம் ஆண்டு நான் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானபோது அதை பார்க்க எனக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, அதேபோல் இப்போது 43 வருடங்களுக்கு பிறகு இந்த 2.0 படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

click me!