'சுவாதி கொலை வழக்கு' பட இயக்குநருக்கு முன்ஜாமீன் : உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published Jun 16, 2017, 3:08 PM IST
Highlights
HC issued bail for swathi murder case movie


"சுவாதி கொலை வழக்கு" திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியர் ஆகியோருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளல் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்சன் சார்பில், சுவாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமேஷ் செல்வன் இயக்கி உள்ளார். சுவாதி கொலை வழக்கு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, கொலையுண்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் தடைவிதிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த படம் வெளியானால் தனது குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். மேலும், தங்களிடம் எந்த அனுமதியில் பெறாமல் திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

சுவாதி கொலை வழக்கு திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ரமேஷ் செல்வன், யாருடைய மனதையும் புண்படும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் அல்ல என்று விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், கொலையுண்ட சுவாதியின் தந்தை அளித்த புகாரை அடுத்து திரைப்பட இயக்குநர் ரமேஷ் செல்வன், பட தயாரப்பாளர் சுப்பையா, கதையாசிரியர் ரவி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ரமேஷ் செல்வன், சுப்பையா, ரவி ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனு மீதான விசாரணையில், உயர்நீதிமன்றம் அவர்களுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

click me!