Jail Movie : ‘ஜெயில்’ படத்துக்கு விடுதலை கிடைக்குமா? - ஐகோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கும் படக்குழு

By Ganesh PerumalFirst Published Dec 7, 2021, 8:15 PM IST
Highlights

இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை (Jail Movie) வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயில்'. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

இத்திரைப்படத்தை டிசம்பர் 9-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இதனை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஜெயில் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது  சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை ஏதும் வழங்கப்படவில்லை எனவும், படத்தை வெளியிட தகுதியான வினியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி,ஜெயில் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை டிசம்பர் 9-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் வரும் தீர்ப்பை பொறுத்து தான் படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்பது தெரியவரும்.

click me!