தமிழ் சினிமா தலை நிமிர்கிறது..! தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு பாரதிராஜா வாழ்த்து!

By manimegalai aFirst Published Mar 24, 2021, 5:29 PM IST
Highlights

இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ் படங்களுக்காக விருது பெற்ற கலைஞர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் நேற்றுமுன் தினம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ் படங்களுக்காக விருது பெற்ற கலைஞர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது.... தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். 


 
கடின உழைப்பை மதிக்க வேண்டும்... அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது. 
 
2019-ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் 'அசுரன்'.  அதோடு இன்னும் சில நல்ல படங்களும் தேர்வில் கலந்துகொண்டன. 
 
நம் தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்கள் பிறந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2019 ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரன்-க்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளன் திரு. தனுஷூக்கு கிடைத்தது உண்மையிலேயே பெருமை கொள்கிறது நம் தமிழ் சினிமா. 


 
அசுரனை இயக்கிய இயக்குநர் திரு. வெற்றிமாறன், அதீத உழைப்பாளி. கதைக்களம் தேர்ந்தெடுத்து படைப்பாக்கம் செய்வதில் வல்லுனன். பெருமைமிகு தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு ஆகிய மூவருக்கும்   வாழ்த்துகள். 
 
நம்மை பெருமைகொள்ளச் செய்யும் இயல்பான நடிகர் திரு. விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது “Super Deluxe” திரைப்படத்தில் அனைவரையுமே ஆச்சரியப்படுத்திய ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு கிடைத்ததில் மகிழ்கிறோம். சிறந்த நடிகருக்கான அங்கீகாரம் தேசிய அளவில் வரும் ஆண்டுகளில் கிடைக்க வாழ்த்துகிறோம். 


 
சிறந்த படம் என்ற சிறப்பு விருதைப் பெற்ற “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் நாயகன், புதுமை பித்தன், விடா முயற்சியின் உச்சம் திரு. ஆர். பார்த்திபனுக்கும், அப்படத்தின் ஒலிப்பதிவு கலைஞரான திரு. ரசூல் பூக்குட்டிக்கும் பெருமைமிகு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
“விஸ்வாசம்” என்ற மாபெரும் வெற்றி படத்தின் தூணாக விளங்கி, இசையில் சிறப்பித்த இசையமைப்பாளர் திரு.D.இமானுக்கும், “K.D. என்கிற கருப்புதுரை” என்ற அழகிய படத்தில் நம்மை அதிகம் கவர்ந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷாலுக்கும் தேசிய விருது கிடைத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 
 
உங்கள் அனைவரின் அங்கீகாரம் நம் தமிழ் சினிமாவை பெருமைகொள்ளச் செய்திருக்கிறது. 
 
உள்ளபடியே பெருமை கொள்கிறோம். வாழ்த்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் உங்களின் மதிப்பிற்குரிய திறனை வெளிப்படுத்துங்கள். 
 
வாழ்த்துகள். உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா என தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

.

click me!