நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக பாலிவுட் பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் குறித்து, சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேடி பிடித்து நடித்து, வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். இவருடைய விவாகரத்து மற்றும் கிசுகிசு குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தாலும், சைலன்டாக தன்னுடைய வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த பின்னர், முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'வாத்தி' ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்தன. இடைத்தொடர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில், தனுஷ் தன்னுடைய அடுத்த ஹிந்தி படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனுஷ் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'ராஞ்சனா திரைப்படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிறது, சில திரைப்படங்கள் நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும். அப்படி ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு சகாப்தத்திற்கு பின் ராஞ்சனாவின் உலகில் இருந்து மற்றொரு கதை, "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும்.. எங்களுக்கும்.. " என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனுஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனுஷ் மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் இந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், அடுத்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது