Ilaiyaraaja : ராக் வித் ராஜா என்கிற இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் பாட உள்ளார்.
இசை ராஜா... இளையராஜா
தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இசை ராஜ்ஜியம் நடத்தி வருபவர் இளையராஜா. உலகம் முழுவதும் இவரது பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 78 வயதானாலும் இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் இளையராஜா. இவரது இசையில் தற்போது வெற்றிமாறனின் விடுதலை படம் தயாராகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா அவ்வப்போது இசைக்கச்சேரிகள் நடத்தி மக்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் துபாயில் இவர் நடத்திய இசைக்கச்சேரியைக் காண மக்கள் வெள்ளம்போல் திரண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னையில் ராக் வித் ராஜா
இந்நிலையில், தற்போது சென்னையில் இசைக் கச்சேரி நடத்த தயாராகி வருகிறார் இளையராஜா. இன்று இரவு சென்னை தீவுத் திடலில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் ஆன்லைனில் சூடுபிடித்துள்ளது.
இளையராஜா - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி
இந்த இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் பாட உள்ளார். இதற்காக இளையராஜாவுடன் இணைந்து அவர் பயிற்சியும் மேற்கொண்டார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜா குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் அன்பும் பாசமும் நிறைந்த பக்கம் இது. இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’வுக்கு அர்த்தம் என்ன? - பீஸ்ட் பாடலாசிரியர் விளக்கம்