பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் இந்த முறை மிக பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து வருகின்றார்.
இந்நிலையில் இதுவரை 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 15 வது போட்டியாளராக களம் இறங்கி உள்ளார் தமிழ் திரை உலகின் மூத்த நடிகை விசித்ரா அவர்கள்.. நடிகை விசித்ரா அவர்களுக்கு எந்த விதமான அறிமுகமும் தேவையில்லை.
தமிழ் திரை உலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ஒரு முன்னணி நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய விசித்திரா, குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும், பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கவுண்டமணி, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து இவர் நகைச்சுவை நாயகியாகவும் வலம் வந்திருக்கிறார். இறுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இரவு பாடகன் என்ற திரைப்படத்தில் நடித்ததோடு இவர் வெள்ளித்திரையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிய நாடகங்களில் நடிக்க துவங்கினார், கடந்த 22 ஆண்டுகளாக நாடகங்களிலும் நடித்து வரும் நடிகை விசித்ரா அவர்கள், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்து அசத்தியது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.