இசைஞானி இளையராஜா சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர்... பிரபல நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்து வரும் 'சாமானியன்' படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.
80-பது மற்றும் 90-களில் "மக்கள் நாயகன்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு 'சாமானியன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவருடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, 'தம்பிக்கோட்டை', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' உள்ளிட்ட படங்களை இயக்கிய R. ராகேஷ் இயக்கி வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட, அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும் 'எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்' சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.
'பாரதி கண்ணம்மா' முடிவுக்கு வருவது எப்போது? இயக்குனருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகர்கள்!
'சாமானியன்'படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். எப்போதுமே ராமராஜனையும் - இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணைநின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.
இன்னும் சொல்லப்போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல, தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இசைஞானி இசையமைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என, அவரையே படக்குழு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப்படம் தொடர்பாக இளைய ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன், நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். " இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்" என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, 'சாமானியன்' என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான். காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த படம் அமைந்துள்ளது.
யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!
தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி. ராமராஜனின் பல வெற்றிப்படங்களை இயக்கிய அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின் அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும்” என்றார்.
இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான 'அண்ணன்' என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது. 'சாமானியன்' படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.