நடிகர் திலகம் சிவாஜியை வைத்து நடிகை பத்மினி பாடல் காட்சி ஒன்றை இயக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் 300 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது நடிப்பின் தற்போதைய நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் அவர் 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டிய சிவாஜி கணேசன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
50, 60களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சிவாஜி. மேலும் 80களி முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா, ராதாவுடனும் அவர் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் சிவாஜிக்கு முன்பே திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பத்மினி.
1947-ம் ஆண்டு கன்னிகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான பத்மினி பின்னர் மோகினி, வேதாள உலகம் உள்ளிட்ட பல படங்களில் டான்சராக இருந்த பத்மினி பின்னர் 1952-ம் ஆண்டு வெளியான பணம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சிவாஜி நடித்த முதல் படமும் இதுதான்.
ஆனால் பராசக்தி படம் முதலில் வெளியானதால், அந்த படமே சிவாஜியின் முதல் படமாக பார்க்கப்படுகிறது. பணம் படத்தை தொடர்ந்து சிவாஜி பத்மினி ஜோடி பல படங்களில் ஜோடி சேர்ந்தது. குறிப்பாக அன்பு, தூக்கு தூக்கி, இல்லற ஜோதி, மங்கையர் திலகம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் சிவாஜி பத்மினி ஜோடி தொடர்ந்தது. சிவாஜி உடன் இணைந்து நடிகை பத்மினி 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சிவாஜி உடன் இணைந்து மனைவி, அண்ணி, அம்மா என 3 கதாப்பாத்திரத்திலும் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் பத்மினிக்கு உள்ளது. எதிர்பாராதது என்ற படத்தில் சிவாஜியின் காதலியாக பத்மினி நடித்திருப்பார். ஆனால் 2-ம் பாதியில் அம்மாவாக மாறிவிடுவார். அதாவது அந்த படத்தில் சிவாஜி படிப்புக்காக வெளிநாடு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாக தகவல் பரவும்.
இதை தொடர்ந்து நடிகை பத்மினி சிவாஜியின் தந்தையை திருமணம் செய்து கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்போது சிவாஜியை காதலித்து வந்த பத்மினி படத்தின் மற்றொரு பாதியில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் மங்கையர் திலகம் படத்தில் சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடித்திருப்பார். இதை தொடர்ந்து பல படங்களில் சிவாஜி – பத்மினி இருவரும் காதலர்களாக நடித்திருப்பார்கள். 1959-ம் ஏ.எஸ்.ஏ சாமி தங்கப்பதுமை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒருநாள் இயக்குனருக்கு உடல்நலம் சரியில்லை. அப்போது எனக்கும் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் என்னாலும் ஷூட்டிங்கை கேன்சல் செய்ய முடியவில்லை.
எனவே அந்த பாடல் காட்சியை சிவாஜியை நடிக்க வைத்து பத்மினி தான் டைரக்ஷன் செய்துள்ளார். அப்போது சிவாஜி நான் நடிகர், நீதான் இயக்குனர், டைரக்டர் மேடம் என்ன பண்ணனும் என்று கேட்டுள்ளார். இப்படி பத்மினி இயக்க, சிவாஜி நடிக்க தங்கப்பதுமை படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.