Iridium Scam : இரிடியம் தொழிலில் ரூ.5 கோடி முதலீடு செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ராம் பிரபு, தன்னையும் முதலீடு செய்ய வைத்ததாக நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டை. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. பண ஆசையை தூண்டி ஏமாற்றும் மோசடி கும்பல் பற்றி இப்படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. குறிப்பாக அதில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஏமாற்றும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும்.
இந்நிலையில், தற்போது அதே பாணியில் சினிமா நடிகர் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி ஒருவர் ரூ.1.80 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விக்னேஷ். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
undefined
அந்த புகார் மனுவில், கிண்டியில் ஒரு உயர்ரக சலூன் கடை ஒன்றை நான் நடத்தி வருகிறேன். அந்த கடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார். அவரிடம் உங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏன் என கேட்டதற்கு, இந்திய அரசின் அனுமதியோடு ஆஸ்திரேலியாவுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இரிடியம் தொழிலில் ரூ.5 கோடி முதலீடு செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய ராம் பிரபு, தன்னையும் முதலீடு செய்ய வைத்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த ரூ.1.80 கோடியை அவரிடம் கொடுத்தேன். பல நாட்கள் ஆகியும் கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்காததால் இதுகுறித்து ராம் பிரபுவிடம் கேட்டேன்.
அவர் கண்டெய்னரில் ரூ.500 கோடி வந்து கொண்டிருப்பதாகவும், பணம் வந்தவுடம் வட்டியுடன் கொடுப்பதாகவும் கையெழுத்திட்டு ராம் பிரபு நம்பிக்கை அளித்தார். எனினும் அவர்மீது சந்தேகம் எழுந்து, அவரைப்பற்றி விசாரித்தபோது தான் அவர் மோசடி நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
தன்னைப் போன்று ராம் பிரபுவிடம் ஏராளமானோர் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரக் கோரியும் நடிகர் விக்னேஷ் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Suriya New movie : சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல இசையமைப்பாளர்! வாய்ப்பை தட்டித்தூக்கிய அனிருத்