களத்திலேயே துடிதுடித்து இறந்த கபடி வீரர் விமல்ராஜ்! குடும்பத்தாரிடம் 10 லட்சம் நிதியுதவி வழங்கினார் RK சுரேஷ்

By Ganesh AFirst Published Aug 6, 2022, 10:57 AM IST
Highlights

கபடி விளையாடியபோது களத்திலேயே துடிதுடித்து இறந்த விமல்ராஜின் குடும்பத்தினருக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாணாடிகுப்பம் என்கிற கிராமத்தில் கபடி குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குழு சார்பில் கடந்த ஜூலை மாதம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. இதில் ஜூலை 24-ந் தேதி நடத்தப்பட்ட போட்டியில் கீழக்குப்பம் மற்றும் புறங்கனி ஆகிய இரு அணிகள் மோதின.

இதில் புறங்கனி அணியை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் ரெய்டு சென்றபோது அவரை எதிரணியினர் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் இருக்க துள்ளிக் குதித்து தாவிய விமல்ராஜ், கீழே விழுந்து ஆடுகளத்திலே மயங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்களும், பார்வையாளர்களும் விமல்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விமல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கபடி விளையாடும் வீரர் ஒருவர் களத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வைரலாக பரவி காண்போரை கண்கலங்க செய்தது. விமல்ராஜ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராவார். இவருக்கு தாய், கண்பார்வையற்ற தந்தை மற்றும் ஒரு தங்கை ஆகியோர் இருக்கின்றனர். விமல்ராஜை நம்பி தான் குடும்பத்தின் வாழ்வாதாரமே இருந்த நிலையில், அவரும் இறந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரின் குடும்பத்தினருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 6 வருஷமா துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் கொடுக்குறான்.... வாலிபர் மீது நடிகை நித்யா மேனன் பகீர் குற்றச்சாட்டு

தமிழக அரசு சார்பில் விமல்ராஜின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர்கள் மெய்யநாதன், சிவி கணேசன் மற்றும் எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் ஆகியோர் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதுதவிர அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கினார்.

இதையடுத்து கபடி அசோசியேசன் சார்பில் ரூ.4 லட்சமும், மாணாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரூ.3 லட்சமும் வழங்கி இருந்த நிலையில், தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 

இதையும் படியுங்கள்... லுங்கியோட வந்தா டிக்கெட் தர மாட்டோம்.... அடாவடி செய்த தியேட்டர்காரர்கள் - பதிலுக்கு ரசிகர் செய்த தரமான சம்பவம்

click me!