
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் ஆர்யா. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு எந்த படங்களும் அமையவில்லை. தற்போது கைவசம் ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு வெளியான ‘1000 பேபிஸ்’ என்கிற மலையாளம் தொடரையும் தயாரித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யா - சாயிஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. நடிப்பது, சினிமா தயாரிப்பது என்று இல்லாமல் உணவகம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களிலும் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். நடிப்பதை விடவும் தனது சொந்த தொழில்களில் ஆர்யா அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிப்புத் துறையில் இருந்து விலகி ஆர்யாவின் தொழில்களை கவனித்து வருகிறார்.
நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஸீ ஷெல்(Sea Shell) என்கிற பெயரில் ஹோட்டல்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 18) காலை முதலே சோதனையைத் தொடங்கியுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் ஆர்ய மீது புகார் எழுந்தது. இதையடுத்து கொச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள உணவகத்தில் மூன்று வாகனங்களில் வந்து சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
சில உணவகங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், ஹோட்டல் காவலாளிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரி ஏய்ப்பு செய்துள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்கு பின்னர் முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.