
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக வெளியிடப்படும் டீசர், டிரெய்லர், லிரிக்கல் வீடியோ, பாடல்கள், கிளிம்ப்ஸ் வீடியோ, ஸ்னீக் பீக் வீடியோக்கள், ப்ரோமோ காட்சிகள் ஆகியவை ரசிகர்களை ஈர்ப்பதற்கும், படத்தை விளம்பரப்படுத்துவதற்கும், ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் டிரெய்லர்கள் என்பது அரிதாக இருந்த நிலையில், தற்போது இந்திய சினிமாவில் டிரெய்லர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தொலைக்காட்சி ஊடகங்களின் வளர்ச்சிக்கு முன்னால், சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு இல்லாத காலங்களில் ஒரு படத்தின் டிரெய்லர் வெளியிடுவது என்பது அரிதான விஷயமாகவே இருந்தது. ஆனால் தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் தொடங்கி பெரிய பட்ஜெட் படங்கள் வரை டிரெய்லர்கள் வெளியாவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பாக, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அவர்களை திரையரங்குகளுக்கு வரவைப்பது சினிமா தயாரிப்பாளர்களின் முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு திரைப்படத்தில் இடம் பெறும் முக்கிய மற்றும் சிறந்த காட்சிகளைக் கொண்டு டிரெய்லர்கள் வடிவமைக்கப்படுகின்றன. படத்தின் கதையை முழுமையாக வெளிப்படுத்தாமல், அதே சமயம் படம் குறித்த ஒரு தெளிவான சித்தரிப்பை தரும் வகையில் டிரெய்லர்கள் அமைக்கப்படுகின்றன. உலக அளவில் திரைப்படத்திற்கு வெளியிடப்படும் டிரெய்லர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகின. 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட்’ என்கிற படத்திற்கு டிரெய்லர் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால், ஒரு திரைப்படம் முடியும் நேரத்தில், கடைசி சில நிமிடங்கள் அடுத்த படத்தின் சில காட்சிகள் முன்னோட்டங்களாக வெளியிடப்பட்டன. இவையே டிரெய்லர் என அழைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுபோல டிரெய்லர்களை வெளியிடும் வழக்கம் மிகத் தாமதமாகவே தொடங்கியது.
தமிழ் சினிமாவில் டிரெய்லர்கள் வெளியிடப்படாமல் இருந்ததற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். கிராமப்புறங்களில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டாமல் இருப்பது, படத்தை விளம்பரம் செய்ய ஊடகங்கள் குறைவு, செய்தித்தாள்கள், சுவரொட்டிகள் மட்டுமே விளம்பரம் செய்வதற்கு முக்கிய ஊடகங்களாக விளங்கியது ஆகியவையே டிரெய்லர்களை வெளியிட இருந்த சவால்களாகும். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததும், நிதி பற்றாக்குறையும் டிரெய்லர் வெளியிடுவதில் இருந்த சவால்களும் டிரெய்லர்களை வெளியிடுவதற்கான முக்கிய தடைகளாக இருந்தன. ஒரு டிரெய்லரை உருவாக்க தேவையான ஸ்டுடியோ வசதிகள், உபகரணங்கள், வெளியிடுவதற்கான வழிமுறைகள் போன்றவை அக்காலத்தில் அரிதாக இருந்தன. இருப்பினும் ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் தங்கள் படங்களின் அருமை கருதி சிறிய அளவிலான முன்னோட்டங்களை வெளியிட்டன. அவை இன்று நாம் காணும் முழுமையான டிரெயிலர்களைப் போல் இல்லாமல் சில காட்சிகள், படப் படிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவையாக இருந்திருக்க கூடும்.
டிரெய்லர்கள் ஒரு வடிவத்திற்கு வருவதற்கு முன்னால் ‘ஷார்ட் ப்ரோமோஷனல் ஃபிலிம்ஸ்’ என்கிற ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதாவது ஒரு படத்தைப் பற்றியும், அதில் நடித்துள்ள நடிகர்கள் பற்றியும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் கொண்டதாக இந்த வீடியோக்கள் இருந்தது. இவை முழுமையான டிரெய்லர்கள் கிடையாது. நவீன டிரெய்லர்களின் வருகை 1990-களுக்குப் பிறகு தான் தமிழ் திரையுலகில் வளர்ந்தது. குறிப்பாக தனியார் தொலைக்காட்சிகள் தோன்றிய பிறகு திரைப்படங்களை விளம்பரம் செய்யும் உத்திகள் மாற்றங்களைக் கண்டன. தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை விளம்பரப்படுத்துவதற்கு புதிய வழிகளைத் தேடத் தொடங்கினர். தொலைக்காட்சிகளில் டிரெய்லர்களை ஒளிபரப்புவது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவே பின்னர் வழக்கமாக மாறிப்போனது. தற்போது சமூக ஊடகங்களில் அதீத வளர்ச்சி காரணமாக டிரெய்லர்கள் சமூக வலைதளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் டிரெய்லர்கள் வேகமாக பகிரப்படுவதையும், ரசிகர்களிடையே விரைவாக சென்று சேருவதையும் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ் திரைப்பட வரலாற்றில் டிரெய்லரை முதன் முதலில் உருவாக்கியது யுவன் சங்கர் ராஜா என்று கூறப்படுகிறது. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே டிரெய்லரை உருவாக்கியுள்ளார். 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படத்தில் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படம் கீழ்வெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் சில காட்சிகளை தொகுத்து, ஒரு சிறிய இசையை உருவாக்க படத்தின் தயாரிப்பாளர் யுவனிடம் கேட்டுக் கொண்டார். யுவனும் அதுபோலவே படத்திலிருந்து சில காட்சிகளுடன் ஒரு இசையை அமைத்து கொடுத்துள்ளார். அது தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகவே படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பும் யுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழ் சினிமாக்களுக்கு முதலில் அறிமுகமான டிரெய்லர்.
அதன் பிறகு அடுத்தடுத்து வந்த படங்கள் டிரெய்லரை உருவாக்கி தங்களது படத்தை விளம்பரப்படுத்த தொடங்கின. 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, சமூக ஊடகங்களின் வளர்ச்சி, Youtube, Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடகங்களில் ஆதிக்கம் டிரெய்லர் கலாச்சாரத்தை புரட்சிகரமான முறையில் மாற்றின் தற்போது ஒரு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி அனைத்தும் சமூக ஊடக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகின்றன. மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் அளவிற்கு டிரெய்லர்கள் மாறி உள்ளன. தமிழ் சினிமா இன்று உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு முக்கிய அடித்தளம் இந்த டிரெய்லர்கள் ஆகும். சினிமா மீதான ஆர்வத்தை ரசிகர்களிடையே அதிகப்படுத்துவதையும், பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் உத்திகளையும் தமிழ் திரையுலகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.