
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று 2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறார்கள்.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தீவிரமடையும் என்பதால் அதையும் முதலீட்டாளர்கள் உற்று நோக்கி வருகிறார்கள். ஆசியப் பங்குச்சந்தை, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால், பல நகரங்களில் லாக்டவுன் நீடித்து வருகிறது. இதனால் பல பொருட்களின் சப்ளையில் தடை ஏற்பட்டு உலகளவில் உற்பத்தி பாதிக்கும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்துடன் கவனித்து வருகிறார்கள்.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கடந்த இரு நாட்களாக சரிந்துவந்த கச்சா எண்ணெய் விலை இன்று உயரத் தொடங்கியுள்ளது.பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒருடாலர்அதிகரித்துள்ளது. இதையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள்.
இந்தியாவில் நெஸ்ட்லே இந்தியா , ஹெச்சிஎல் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர்த்தக நேரத்தில் வெளியாகும் என்பதால், முதலீட்டாளர்கள் அந்த பங்குகள் மீது கவனம் செலுத்தியுள்ளனர்.
ஏற்றத்துடன் தொடக்கம்
பெரும்பாலும் சாதகமான கண்ணோட்டத்தோடு வர்த்தகத்தை முதலீட்டாளர்கள் அணுகியதால், வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 358 புள்ளிகள் அதிகரித்து, 57,396 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 105 புள்ளிகள் அதிகரித்து, 17,242 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
காலை வர்த்தகத்தை 1627 பங்குகள் ஏற்றத்துடன் நகர்ந்து வருகின்றன, 323 பங்குகள் மதிப்பு சரிந்துள்ளது, 54 பங்குகள் மதிப்பு மாறாமல் உள்ளது.
நிப்டியி்ல், அப்பலோ மருத்துவமனை, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், மாருதி சுஸூகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடன் நகர்ந்து வருகின்றன. நெஸ்ட்லே இந்தியா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, ஹின்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன. நிப்டியில் உலோகத்துறை பங்குகள் மட்டும் சரிந்துள்ளன. மாறாக, ரியல்எஸ்டேட், பொதுத்துறை வங்கிப்பங்குகள், ஊடகம், நிதிச்சேவை ஆகிய துறைப் பங்குகள் லாபத்துடன் நகர்ந்து வருகின்றன
ரிலையன்ஸ் லாபம்
30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் பங்குகளைத் தவிர 28 பங்குகளும் லாபத்தோடு நகர்கின்றன. அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.80 சதவீதம் ஏற்றத்துடன் நகர்ந்து வருகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.