
மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி, 5 நாட்களளுக்குப்பின் உயர்வுடன் முடிந்தன.
நம்பிக்கை
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தால் வட்டி வீதத்தை உயர்த்த பெடரல் வங்கி முடிவு செய்துள்ளது. இது மே மாதத்திலிருந்தே நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும், ஷாங்காய் நகரில் தொற்று குறைந்து வருவதும், மீண்டும் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியிருப்பதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியப் பங்குச்சந்தை
ஐரோப்பிய பங்குச்சந்தையும், அமெரிக்கப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் முடிந்தன. ஆசியாவில் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் பங்குச்சந்தையும் உயர்வுடன் முடிந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
சர்வதேச நிதியம்
இந்த வாரத்தில் இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாவதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்தபோதிலும், இரு நாடுகளின் போரால் உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் என சர்வதேச நிதியம் தெரிவத்திருந்தாலும் அதை முதலீட்டாளர்கள் பொருட்டாகக் கருதவில்லை.
காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலையில் உயர்வுடன் முடிந்தது. மும்பைப் பங்குச்சந்தையில் மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 574 புள்ளிகள் ஏற்றத்துடன் 57,037 புள்ளிகளில் முடிந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 177 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,136 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. 1716 பங்குகள் மதிப்பு உயர்ந்தது, 1593 பங்குகள் மதிப்பு சரிந்தது, 111 பங்குகள் மதிப்பு மாறவில்லை.
ஏற்றம்
கடந்த 10 நாட்களுக்குப்பின் ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி பங்குகள் ஒரு சதவீதம் லாபத்துடன் முடிந்தன.
30நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 11 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் முடிந்தன. மீதமுள்ள 19 பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.
பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், எய்சர் மோட்டார்ஸ் ஆகியவை நிப்டியில் லாபமடைந்த பங்குகளாகும். பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், ஜேஎஸ்டபிள்யு, ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன.
நிப்டியில் ஆட்டமொபைல், மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆகிய பங்குகள் 1-2 சதவீதம் லாபமடைந்தன. மும்பைப் பங்குச்சந்தையில் மாருதி, ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ், நெஸ்ட்லே இந்தியா ஆகிய பங்குகள் 2 சதவீதம் லாபமடைந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.