லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி, தனது குழுமம் இந்தியாவில் அகமதாபாத் மற்றும் சென்னையில் இரண்டு பெரிய வணிக வளாகங்களை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட சில்லறை வணிக நிறுவனமான லுலு குரூப் (Lulu Group), குஜராத்தின் அகமதாபாத்தில் வணிக வளாகத்தை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மால்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மிகப்பெரிய மால் மூலம் குஜராத்தில் வசிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வசதிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி, திங்கள்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் சென்னையிலும் ஒரு ஷாப்பிங் மால் கட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல் இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் தங்கள் புதிய வணிக வளாகத்தையும் திறக்க உ ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் சில்லறை வணிகத்தை மேம்படுத்த லுலு குழுமத்தின் உறுதிப்பாட்டை இந்தப் புதிய மால்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ளுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத் ஆறாவது நகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் 272 கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்தும் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமத்திற்கு எம்ஏ யூசுப் அலி தலைமை தாங்குகிறார். லுலு குரூப் நிறுவனம், வெளிநாட்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. Forbes Middle East இன் படி, அரபு உலகில் 2018 இல் சிறந்த 100 இந்திய வணிக உரிமையாளர்களில் யூசுப் அலி முதலிடத்தை பிடித்தார்.
ரூ.7300 கோடி நிறுவனத்தை வைத்திருக்கும் இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
யார் இந்த எம்.ஏ யூசுப் அலி?
யூசுப் அலி 1955-ம் ஆண்டு நவம்பர 15-ம் தேதி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகாவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை கராஞ்சிராவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் டிப்ளமோ பெற்ற அவர் 1973 இல் இந்தியாவை விட்டு அபுதாபிக்கு சென்றார், அங்கு அவரது தந்தைவழி மாமா, லுலு குழும நிறுவனங்களின் தலைவரும் நிறுவனருமான எம் கே அப்துல்லா வணிகம் செய்து வந்தார். யுசுப் அலிகுழுவின் இறக்குமதி மற்றும் மொத்த விநியோகத்தை மேம்படுத்தினார். மேலும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டைத் தொடங்குவதன் மூலம் சூப்பர்மார்க்கெட் வணிகத்தில் இறங்கினார்.
1990 களில் அவர் தனது முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட்டைத் தொடங்கினார், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில்லறை விற்பனைத் துறை ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டது. இதன் மூலம் அபுதாபியின் சில்லறை விற்பனைத் துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
யூசுப் அலி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து உறைந்த பொருட்களை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் வகையில் வணிகத்தை பல்வகைப்படுத்தினார். இந்த தயாரிப்புகள் அபுதாபியில் மட்டுமின்றி மற்ற ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் கிடைத்தது.. . உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளை உள்ளடக்கிய வணிகம் விரைவில் விரிவுபடுத்தப்பட்டது. லுலு குருப் நிறுவனம் குளிர்பதனக் கிடங்குகள், இறைச்சி மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகள், பெரிய அளவிலான இறக்குமதி மற்றும் ஹோட்டல் குழுக்களுக்கு விநியோகம், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் கப்பல் சேவைகள் ஆகியவற்றையும் தொடங்கியது. 1980 களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மொத்த மற்றும் சில்லறை உணவு சந்தையில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது.
லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் தற்போது பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட கடைகளுடன் மத்திய கிழக்கு சில்லறை விற்பனை துறையில் முக்கிய பங்குதாரர்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், அபுதாபியின் அரச குடும்பம் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளுக்காக 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்திலும் அவருக்கு சொத்துக்கள் உள்ளன. தொற்றுநோய்களின் போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அவர் 6.8 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார். இவரது சொத்து மதிப்பு ரூ.49,776 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.