கடன் பத்திரத்தை 30 நாட்களில் திரும்ப ஒப்படைக்காவிட்டால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணத்தை வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும்.
வங்கிக் கடன் பெற்ற வாடிக்கையாளர் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தி பின் 30 நாள்களில் அவரது சொத்துப் பத்திரம் மற்றும் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது. அப்படி அளிக்கவில்லை என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உத்தரவிட்டுள்ளது.
வங்கி மற்றும் பிற கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் சொத்துப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பின் அவை திருப்பி அளிக்கப்படும். கடனிலிருந்து மீண்டதாக தடையில்லாச் சான்றிதழும் வழங்கப்புடம்.
undefined
ஆனால், அடமானப் பத்திரத்தை ரத்து செய்து தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இழுத்தடிக்கின்றன என்று வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், ஆா்பிஐ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளா் ஒருவா் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களுக்கு அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதைச் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் சார்பில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணத்தை வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளா் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் எந்தக் கிளையில் கடன் பெற்றார்களோ அதே கிளைக்குச் சென்றால் தான் ஆவணங்களைத் திரும்பப் பெற முடியும் என்று சொல்லக்கூடாது எனவும் விரும்பும் கிளையில் ஆவணங்களைத் திருப்பப் பெறும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ சொல்கிறது. இது தொடா்பான விவரங்களைக் கடன் அளிக்கும்போதே வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கடன் பெற்றவர் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளையும் முன்கூட்டியே வாடிக்கையாளரிடம் விளக்கிக் கூறவேண்டும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைந்தாலோ, தொலைந்துபோனாலோ சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளர் மாற்று ஆவணம் பெற உதவிகள் செய்ய வேண்டும். இதற்கு 60 நாள்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறுகிறது.
இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.