சர்க்கரை ஏற்றுமதிக்கான நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
அனைத்து வகையான சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு அப்பாலும் நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரை விநியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு கட்டுப்பாடு விதித்தது. சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் தொடர்கிறது. ஏற்றுமதி தடைக்கான காலம் முடியும் சூழலில், சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட பொது அறிவிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி, சிறப்பு கோட்டாவின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று தற்போதைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு நுகர்வுக்கு நியாயமான விலையில் போதுமான சர்க்கரை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், கட்டுப்பாடற்ற சர்க்கரை ஏற்றுமதியைத் தடுக்கும் பொருட்டு, நடப்பாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்திருந்தது.
கடந்த பருவத்தில் 11.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு சீசனில் 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்தது.
உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் கரும்பு விளையும் மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த மாவட்டங்களில் பருவமழை இந்த ஆண்டு இதுவரை சராசரியாக 50 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன.
காசா மருத்துவமனை தாக்குதல்: சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - பிரதமர் மோடி!
அதேபோல், 2023/24 பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 31.7 மில்லியன் டன்னாக இருக்கும் என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கணித்துள்ளது. இந்த சூழலில், சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாடுகளில் விற்பனையை கட்டுப்படுத்த சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியை இந்தியா விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.