விவசாயிகளின் நண்பனான மண்புழுவால் கூட உங்களுக்கு வருமானம் வரும். எப்படி?
உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் தூக்கி எறியப்பட்டு அது கப்பல்களில் தூத்தூக்குடி துறைமுகத்திற்கு வந்து இறங்கினாலும் கேட்பாரில்லை.
பயன்படுத்தியதை எல்லாம் நமது வீட்டில் இருந்து ரோட்டில் தூக்கி எறிந்து விட்டு வீட்டில் மட்டும் சுத்தம் பார்க்கும் நம்மவர்களை எண்ணியும் நொந்து கொள்ள தான் வேண்டும்.
இந்திய நகரங்கள் பெரும்பாலும் அழுக்கு மற்றும் குப்பைகளால் நிரம்பி வழிவதை பார்த்து தான் மேற்கத்திய நாடுகள் ‘ இவர்கள் எதையும் தாங்குவார்கள்” என்ற நினைப்பில் தங்கள் நாட்டு குப்பைகளை எல்லாம் கூட இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள் போல!
இனி மேலாவது வீட்டில் நாம் வீணாக தூக்கி எறியும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்ற முயலுவோம். இந்த உரத்தை கொண்டு வீட்டு தோட்டம் போடலாம். அல்லது யாருக்காவது விவசாயிக்கு இலவசமாகவும் கொடுக்கலாம்.
நகரங்களை போல் கிராமங்களும் தற்போது குப்பையை கண்டு கொள்ளாத போக்கு காணப்படுகிறது. கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் கிராமத்தில் கிடைக்கும் மக்கும் குப்பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மண்புழு உரமாக மாற்றி பெரிய தொழிலாகவே செய்யலாம்.
மண்ணுக்கு தாய்ப்பால் போல் இருப்பது இயற்கை உரம் மட்டுமே. எனவே அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையில் கிடைக்கும் தொழுஎரு, தழை எரு ஆகியவற்றை பயன்படுத்துவது நிலத்திற்கும், பயிர்களுக்கும் ஏற்றது. இந்த தொழு மற்றுமு தழை எருவிற்கு ஒப்பாக கருதப்படும் மண்புழு உரத்தை நாமே தயாரித்து பயிருக்கு இடலாம்.
வேளாண்மை தொடங்கிய காலம் முதலே மண்புழுவை விவசாயிகளின் நண்பன் எனவும், மண்ணின் வளத்தை திரும்ப நிலைநிறுத்தும் திறன் படைத்தது என்றும் சொல்வதுண்டு.
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். மண்புழு உரம் தயாரிக்க சில வகை மண்புழு இனங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன.