நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
நாட்டுக் கருப்புக் கோழி
கருங்கோழி அல்லது நாட்டுக் கருப்புக் கோழி,கடக்நாத் கோழி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் காணப்படுகிறது. இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது.
அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் பின்பகுதியில் கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.
பருவமடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும் இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது.கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம்.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை உள்ளது. குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.
ஆதிவாசிகள், கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்த்து வருகின்றனர். சேவல் வேண்டுதலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.